உடலில் கணையம் தான் ஹார்மோன்கள் மற்றும் செரிமானத்திற்குத் தேவையான நொதிகளை உற்பத்தி செய்கிறது. அந்த கணையம் ஒருவரது உடலில் சரியாக இயங்காமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஒருவரது உடலில் கணையம் சரியாக இயங்குவதில்லை என்பதை எப்படி அறிவது என்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கணையத்தில் பிரச்சனை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது.
மலத்தின் நிறத்தில் மாற்றம் கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் நொதிகள், கொழுப்புக்கள் மற்றும் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, ஈ மற்றும் கே போன்றவற்றை உறிஞ்ச உதவும். ஆனால் மலம் கழிக்கும் போது, மலம் வெளிரிய நிறத்தில் கொழுப்புக்களாக இருப்பது போன்று தென்பட்டால், கணையம் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சுவதில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.
டைப்-2 நீரிழிவு கணையம் இன்சுலின் உற்பத்தியையும், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே கணையம் சரியாக இயங்காமல் இருந்தால், டைப்-2 நீரிழிவு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.
குமட்டல் மற்றும் வாந்தி கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் கொழுப்புக்களை உடைக்கும். ஆனால் அந்த கணையம் சரியாக இயங்காமல் இருந்தால், உடலால் கொழுப்புக்களை செரிக்க முடியாமல், அதன் விளைவாக குமட்டல் மற்றும் வாந்தியால் அவஸ்தைப்படக்கூடும்.
அடிவயிற்று வலி அடிவயிற்றில் கடுமையான வலியை சந்தித்தால், அது கணையத்தில் அழற்சி மற்றும் கணைய புற்றுநோயைக் குறிக்கும். ஆகவே அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், சாதாரணமாக விடாமல் உடனே மருத்துவரை அணுகி உடலை சோதித்துக் கொள்ளுங்கள்.
திடீரென்ற உடல் எடை குறைவு அடிவயிற்று வலியுடன், உடல் எடையும் குறைந்தால், அது கணைய புற்றுநோய்க்கான அறிகுறியாகும். சில நேரங்களில் தைராய்டும் திடீர் உடல் எடை குறைவிற்கு காரணமாக இருக்கும். ஆகவே எவ்வித முயற்சியும் இல்லாமல் உடல் எடை குறைந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.