இணையம் பரவலாகிவிட்ட உலகில், ஒவ்வொரு நாட்டின் தொழில்நுட்பத் திறன்களும் அதன் வேகத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது. தற்போது, 100 ஜிகாபிட் என்பது உலகளவில் சராசரி வேகம், அமெரிக்கா 400 ஜிகாபிட் வரை செல்கிறது. இந்நிலையில், பல்வேறு தளங்களில் அமெரிக்காவுக்கு போட்டியாக வலம் வந்த சீனா, ஒரேயடியாக 1,200 ஜிகாபிட் வேகத்தில் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. சீனா மொபைல், ஹூவாய் டெக்னாலஜிஸ் மற்றும் கார்னெட் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன் வேகம் ஒரு வினாடிக்கு 1200 ஜிகாபிட்ஸ் என்று கூறப்படுகிறது. பெய்ஜிங், வுஹான் மற்றும் குவாங்சூ நகரங்களுக்கு சுமார் 3,000 கிலோமீட்டர் தொலைவில் ஃபைபர்-ஆப்டிக் குழாய்களை இடுவதன் மூலம் இந்த அதிவேக இணையச் சேவை வழங்கப்படும். இது சீனாவின் இணைய உள்கட்டமைப்பில் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரே நொடியில் HD தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 150 திரைப்படங்களை பதிவேற்றம் செய்து தரவிறக்கம் செய்ய முடியும் என்று Huawei Technologies கூறுகிறது. இது தவிர, தங்களது கண்டுபிடிப்பு மேலும் பல தொழில்நுட்ப அதிசயங்களுக்கு வழி வகுக்கும் என அந்நிறுவனம் கூறுகிறது.