27.4 C
Chennai
Saturday, Oct 12, 2024
p55a
கால்கள் பராமரிப்பு

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

உடலின் மொத்த எடையையும் பாதங்கள்தான் தாங்குகின்றன. உடலில் இருக்கும் நரம்பு முடிச்சுகள் ஒன்றுசேரும் இடமும் பாதம்தான். பல நோய்கள் உடலுக்குள் செல்லும் பாதையும் அதே பாதங்கள்தான். ஆனால், உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பவர்கள்கூட பாதங்களை மட்டும் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். பாதப் பராமரிப்பு என்பது ஒரு கலை. எப்படி? தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுபாஷினி கார்த்திகேயன் விரிவாகப் பேசுகிறார்.

”பாதங்களில் ஏற்படும் பாதிப்பு பெரும்பாலும் வெடிப்புகளாகவே வெளிப்படும். இதைப் பித்த வெடிப்பு என்று சொல்கிறார்கள். உடலில் பித்தம் அதிகமானால், பாதம் வெடிக்கும் என்பது தவறான நம்பிக்கை. பித்தம் அதிகமானால், மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள்தான் வருமே தவிர, பாதம் வெடிக்காது. பாதம் வெடிப்பதற்கு முக்கியக் காரணம், காலில் ஈரப்பதம் குறைந்து வறண்டுபோவது. இதில் நான்கு வகைப் பாதிப்புகள் இருக்கின்றன.

முதலாவது, தோலில் ஈரப்பசை குறைவதால் வருவது. ஈரப்பசை குறைவதால் தோல் கெட்டியாகி வெடிப்பு வரும். அதிக நேரம் நின்றுகொண்டோ அல்லது நடந்துகொண்டோ இருப்பவர்களுக்கு இது பெரும்பாலும் வரும். வீட்டில் அணிவதற்கு என்று மென்மையான காலணிகள் பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

இரண்டாவது, எக்ஸீமா (Eczema). இது சோப் தண்ணீர் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் வரும் ‘ஸ்கின் அலர்ஜி’. எக்ஸிமா பாதிப்பு உள்ளவர்கள், சோப் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, துணி துவைக்கும்போது ஷூ அணிந்துகொள்ளலாம் அல்லது பாலீதீன் கவர்களினால் பாதங்களைச் சுற்றிக் கட்டிக்கொள்ளலாம். இல்லாவிட்டால், அந்த வெடிப்புகள் இன்னும் அதிகமாகும்.
p55a
மூன்றாவது, சோரியாஸிஸ். இதை செதில் உதிர் நோய் என்று சொல்வோம். சோரியாஸிஸ் பாதிப்புகளில் நிறைய வகை இருக்கிறது. இதில் பாதத்தை மட்டுமே பாதிக்கும் சோரியாஸிஸ் இருக்கிறது. இது உள்பாதத்தை அதிகம் பாதிப்பதால் வெடிப்புகள் பாளம் பாளமாக இருக்கும். வெடிப்புகள் நாளடைவில் வெட்டுக் காயங்கள்போல் ஆழமானதாகவும் மாறிவிடும். சில நேரங்களில் அதில் இருந்து ரத்தம்கூட வரும். முதல் இரண்டு வகை வெடிப்புகள் உள்ளவர்கள், மாய்ஸ்ச்சரைஸிங் கிரீம் அல்லது ஆயின்மென்ட் போட்டுக்கொள்வதன் மூலம் குணமாகிவிடலாம். ஆனால், இந்த சோரியாஸிஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு தோல் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.

நான்காவது, அபூர்வமாகக் குழந்தைகளுக்கு வரும் பாத வெடிப்பு. ஐந்து வயதுக்கு மேல் இது வரும். இந்த பாதிப்பு மரபுரீதியானக் குறைபாடுகளால் வருவது. இவர்கள் தினமும் இரண்டு முறை மாய்ஸ்ச்சரைஸிங் லோஷன் அல்லது மாய்ஸ்ச்சரைஸிங் க்ரீம் போன்றவற்றைப் பாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். பனிக் காலங்களில் மூன்று முறையாவது போட்டுக்கொண்டால் குணமாகிவிடும்!” என்றார்.

பாதத்தை அழகாகப் பராமரிப்பதுகுறித்து அழகுக்கலை நிபுணர் ஷிபானி வசுந்தரன் கூறுகையில், ”பாத வெடிப்புகளுக்கு பெடிக்யூர் என்ற சிகிச்சை அழகு நிலையங்களில் இருக்கிறது. வீட்டிலேயே செய்துகொள்ள விரும்புவர்கள் ஃபுட் ஸ்க்ரப்பர் (Foot scrapper)வைத்து செய்துகொள்ளலாம். இந்த ஃபுட் ஸ்க்ரப்பர் செருப்புக் கடைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் கிடைக்கும். குளிக்கும்போது தினமும் பாதங்களில் இந்த ஸ்க்ரப்பர் வைத்துத் தேய்த்துக்கொண்டாலே வெடிப்புகள் குறைந்துவிடும். அதேபோல், க்யூபிக் ஸ்டோன்களும் (Cubic stone) பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும். பாதங்களைச் சுத்தப்படுத்திக்கொள்வது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு பாதத்துக்கு மேல் உள்ள பகுதியையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அழுக்குப் பரவும் வாய்ப்பு உண்டு” என்கிறார் எச்சரிக்கும் விதமாக.

சித்த மருத்துவர் கே.வி.அபிராமி, ”பாதம் பளிச்சென இருக்க வீட்டிலேயே எளிய சிகிச்சை செய்யலாம். வாரத்துக்கு ஒரு நாள் உப்புத் தண்ணீரில் 10 நிமிடங்கள் கால்களை ஊறவைக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து பீர்க்கங்காய் நார் அல்லது க்யூபிக் ஸ்டோன் வைத்துத் தேய்க்க வேண்டும். உப்பு ஒரு கிருமிநாசினி என்பதால், பாதத்தின் உள்ளே இருக்கும் இடங்களை எல்லாம் சுத்தப்படுத்திவிடும். ஊறிய இடங்களைத் தேய்ப்பதால் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். ஆலிவ் எண்ணெய் கொண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை மசாஜ் பண்ணிக் கழுவலாம். கிளிஞ்சல் மெழுகு என்று எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனை வெடிப்புகளில் தடவிக்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்!” என்கிறார் நம்பிக்கையாக.

Related posts

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan

வரப்பிரசாத வசலினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்….

sangika

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்.

nathan

உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

nathan

வீட்டில் கால் பாதங்களை பராமரிக்க

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய பாதத்தை மிருதுவாக்கும் ஸ்கரப்

nathan

நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

சேற்றுப் புண் வந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?சூப்பர் டிப்ஸ்

nathan