விடுமுறை நாட்களில் காலை வேளையில் நல்ல சுவையான காலை உணவு செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் உருளைக்கிழங்கு வெங்காய தோசையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியானது மற்றும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
இப்போது அந்த உருளைக்கிழங்கு வெங்காய தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 3 கப்
உருளைக்கிழங்கு – 200 கிராம் (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் – 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கெடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடானதும், அதில் எண்ணெய் தடவி, மாவை தோசை போன்று ஊற்றி, பின் அதன் மேல் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை பரப்பி, எண்ணெய் ஊற்றி, 3 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து, பின் அதனை மடித்து பரிமாற வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு வெங்காய தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.