அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம் பிடித்திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் மீன் என்றே சொல்லலாம்.
தொடர்ந்து மீன் உட்கொண்டால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். மேலும் பார்வை திறனும் அதிகரிக்கும்.
மீன்களில் உள்ள கால்சியம்,பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. மீன் வகைகளில் ஒன்றான கணவாய் மீனை பயன்படுத்தி யாழ்ப்பாண முறையில் பிரட்டல் எவ்வாறு தயார் செய்வது என பார்ப்போம் .
தேவையான பொருட்கள்
- கணவாய் மீன் – 1 கிலோ
- வெங்காயம் – 2
- பூண்டு – 10 பல்
- தக்காளி – 2
- மஞ்சள்தூள் – சிறிதளவு
- தேங்காய் பால் – 1 கப்
- ப.மிளகாய் – 5
- கடுகு – 2 தேக்கரண்டி
- பெருஜீரகம் – 2 தேக்கரண்டி
- வெந்தயம் – 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
கணவாய் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு கப் அளவு தேங்காய் பால் தயார் செய்து கொள்ளவும்.
வெங்காயம், மற்றும் தக்காளி இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருஜீரகம், வெந்தயம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ப .மிளகாய்,பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் சிறிய துண்டுகளாக வெட்டிய கணவாய் மீன் ,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் கிலறி பின் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான கணவாய் பிரட்டல் தயார்.