தற்போது பெரும்பாலானோர் தூக்கத்தை தொலைத்து தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி தூக்கத்தை தொலைத்து தேடுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம் தான். இன்றைய அவசர காலக்கட்டத்தில் அதிகப்படியான வேலைப்பளுவினால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் இரவில் கூட நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லை.
இப்படி ஒரு பக்கம் வேலைப்பளு இருக்க, மற்றொரு பக்கம் மன அழுத்தத்தினால் பிடித்தவர்களிடம் சண்டைகள் போட்டு பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறே வாழ்க்கையானது தூக்கமின்றி மன அழுத்ததுடன் சென்றால், பின் உடல் நலமானது பாதிக்கப்பட்டுவிடும். எனவே மன அழுத்தத்தைப் போக்கி, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இங்கு ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு குளியல் போடுங்கள்
இரவு தூங்கும் முன் சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போடுங்கள். இதனால் மனம் அமைதியடைந்து, உடலுக்கு மசாஜ் செய்தது போல் இருக்கும். இதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடுங்கள்
மன அழுத்தத்தில் இருக்கும் போது இரவில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடுங்கள். ஏனெனில் தூங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சாப்பிடுவதாக இருந்தால், அவசரமாக சாப்பிடுவோம். இதனால் உணவானது செரிமானமடையாமல், தூக்கத்தைக் கெடுக்கும். எனவே முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.
டிவியை அதிகம் பார்க்காதீர்கள்
மன அழுத்தத்தில் இருக்கும் போது டிவி பார்த்தால் மட்டும் குறைந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பார்த்தால் சரியாவது போல் இருந்தால், அது தற்காலிகமாக தான் இருக்குமே தவிர, டிவியை அணைத்த பின்னர் மீண்டும் மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும். எனவே மன அழுத்தத்தில் இருக்கும் போது தூங்குவதற்கு முயலுங்கள்.
பிடித்தவரிடம் பேசுங்கள்
மனம் கஷ்டமாக ஒருவித அழுத்தத்தில் இருக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுங்கள். இதனால் உங்களின் மனம் இதமாகி, பின் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
சுத்தமான காற்றை சுவாசியுங்கள்
எப்போதும் ஏசி அறையிலேயே இல்லாமல், சற்று காற்றோட்டமாக வெளியே சிறிது தூரம் நடந்து வாருங்கள். இதனால் நல்ல சுத்தமான காற்றினை சுவாசிப்பதுடன், அந்த சுத்தமான காற்றானது மூளையை அமைதிப்படுத்தும்.
பிடித்ததை சாப்பிடுங்கள்
தற்போது பலர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். அப்படி ஈடுபட்டிருக்கும் போது பிடித்த உணவை சாப்பிட முடியாமல் இருப்போம். பிடித்த உணவை சாப்பிட முடியாமல் இருப்பது கூட, மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே எப்போதாவது ஒருமுறை பிடித்த உணவை உண்பதில் தவறில்லை.
அழகை பராமரியுங்கள்
பெரும்பாலான பெண்கள் இரவில் சருமத்தை பராமரிப்பார்கள். இப்படி அழகை அதிகரிக்க முயற்சித்தாலும், அது மன அழுத்தத்தை குறைத்து, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். ஆண்கள் கூட இந்த மாதிரி அழகை அதிகரிக்க முயற்சியை மேற்கொள்ளலாம்.
படுக்கை அறைக்கு வேலையை எடுத்து செல்ல வேண்டாம்
எக்காரணம் கொண்டும் படுக்கை அறை வரை வேலையை எடுத்து செல்ல வேண்டாம். படுக்கை அறையான ஓய்வு எடுப்பதற்காகவே தவிர வேலை செய்வதற்காக அல்ல. எனவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, படுக்கை அறையில் துணையுடன் சந்தோஷமாக ரொமான்ஸ் செய்யுங்கள். இப்படி ரொமான்ஸ் செய்தால் மனம் லேசாகிவிடும்.
நேரத்தை பார்க்காதீர்கள்
இரவல் தூக்கம் எப்போது வந்தாலும், அப்போது உடனே தூங்கிவிடுங்கள். அதைவிட்டு நேரத்தை குறித்துக் கொண்டு தூங்கினால், அதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.