கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும அரிப்புகள். இப்படி சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவதற்கு காரணம், சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சரும செல்கள் தான். இப்படி சரும செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதிகமாக வியர்த்தால், சருமத்தில் இருந்து வெளியேறிய வியர்வையானது மீண்டும் பாதிப்படைந்த சரும செல்களில் நுழைந்து அரிப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்பமானது அதிகம் இருந்தாலும், அரிப்புகள் ஏற்படும். ஆகவே இத்தகைய சரும அரிப்புக்களை இயற்கை வழியில் சரிசெய்ய முயல வேண்டும். அதற்கு சருமத்தை ஐஸ் கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வது, வியர்வையை உறிஞ்சும் நல்ல காட்டன் ஆடைகளை அணிவது போன்ற சிலவற்றை பின்பற்றினால், கோடையில் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்கலாம்.
இப்போது கோடையில் வெப்பத்தினால் ஏற்படும் சரும அரிப்புக்களை தடுக்கும் சில இயற்கை வழிகளைப் பார்ப்போமா!!!
ஐஸ் கட்டிகள்
தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டிகளைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், வெப்பத்தினால் சருமத்தில் அரிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கார்ன் ஸ்டார்ச் குளியல்
தினமும் காலையில் குளிர்ந்த நீரில் சிறிது கார்ன் ஸ்டார்ச் பவுடரை சேர்த்து கலந்து குளித்தால், சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை தவிர்க்கலாம்.
வேப்பிலை
வேப்பிலையை அரைத்து, அதனை சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை அரிப்புக்களை தடுக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் கூட சரும அரிப்புக்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. எனவே தினமும் காற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா
தினமும் குளியல் டப்பில் உள்ள நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 கப் ஓட்ஸ் பவுடர் சேர்த்து அதில் 10 நிமிடம் உட்கார்ந்து, பின் சுத்தமான நீரில் குளித்தால், சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நின்றுவிடும்.
சந்தனப் பவுடர்
சந்தனப் பவுடரில் குளிர்ச்சி தன்மை இருக்கிறது. எனவே சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டரில் கலந்து, அதனை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சூடம் மற்றும் எண்ணெய்
1 சூடத்தை எடுத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவினால், சரும அரிப்புக்கள் குறையும்.