சவுதி அரேபியா அரச குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றானது சாமானியர்கள் மட்டுமல்லாமல், உலக தலைவர்களுக்கும் பரவியுள்ளது. அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து இளவரசர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவரைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வரிசையில், தற்போது சவுதி அரேபிய மன்னர் குடும்பமும் இணைந்துள்ளது.
சவூதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 உறுப்பினர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், ரியாத்தின் ஆளுநராக இருக்கும் மன்னர் குடும்பத்தின் இளவரசர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸுக்காக சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், கிங் ஃபைஸல் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக பிரத்யேகமாக 500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
“இன்னும் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது என்பது தெரியவில்லை. எங்களை உச்ச பட்ச கண்காணிப்போடு இருக்க உத்தரவிட்டுள்ளார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு அனுப்வைக்கப்பட உள்ளார்கள்” என மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளவரசர்கள் பலர் அவ்வப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் என்பதால் அதன் மூலம் வைரஸ் பரவி இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏறத்தாழ சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேர்வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 84 வயதான மன்னர் கிங் சல்மான் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஜெத்தா நகர் அருகே கடலில் இருக்கும் சிறிய தீவில் தங்கியிருப்பதாகவும், இளவரசர் முகமது பின் சல்மான் அவரின் அமைச்சர்கள் பலர் நியோம் நகர் அருகே கடற்கரைப் பகுதியி்ல் தங்கி இருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.