நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. இதுவரை 1,60,000-த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6, 500-க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸை அழிப்பதற்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சிகள் உலகெங்கிலும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலர் கொடிய கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட இயற்கை பொருட்கள் இருப்பதாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.
ஊடக அறிக்கையின் படி, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட பாரம்பரிய சீன மருத்துவத்தில் மூலிகை மருந்து ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிய வலியுறுத்தி வருகிறது.
சீன முலிகை சூப்
கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரதான ஆன்டி-வைரல் மருந்துகளுடன், மூலிகைகளும் சீனாவில் வழங்கப்பட்டு வருகின்றன. அதுவும் ‘நுரையீரல் மற்றும் நச்சுத்தன்மையை நீக்கும் சூப்’ என்று அழைக்கப்படும் சீன மூலிகை சூப் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறதாம். இந்த சூப்பில் எபிட்ரா, பட்டை, அதிமதுர வேர் உள்ளிட்ட 20-க்கும் அதிகமான மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
இதுவரை சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுள் 85% மக்கள் பிரதான ஆன்டி-வைரஸ் மருந்துகளுடன், மூலிகை மருந்துகளையும் எடுத்து வந்ததால் குணமாகியிருக்கலாம் என அறிக்கைகளும் கூறுகின்றன. அதே சமயம் சீன அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரம்பரிய சீன மருத்துவத்தை ஊக்குவிக்க முயற்சிக்கையில், மேற்கத்திய மருத்துவ நிபுணர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.
கொரோனா வைரஸுக்கான ஆயுர்வேத சிகிச்சை
இந்தியாவிலும், ஆயுர்வேத நிபுணர்கள் கொடிய கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க சில மூலிகைகளை ஊக்குவித்து வருகின்றனர். நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதே கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான திறவுகோலாகும் என்று இந்திய ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
மருத்துவ மூலிகைகள்
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த நெல்லிக்காய், அமிழ்தவள்ளி, துளசி, ஷிலாஜித், அஸ்வகந்தா மற்றும் வேம்பு போன்றவற்றை உட்கொள்ள ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சைவன்ப்ராஷ் சாப்பிடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கத்தைத் தடுக்க உதவும் என்றும் கூறுகின்றனர்.
அதோடு தினமும் இஞ்சி, புதினா, பட்டை அல்லது சோம்பு டீயைக் குடிப்பதும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
ராம்தேவ் பாபா கூறும் குறிப்புகள்
சமீபத்தில் சுவாமி ராம்தேவ் பாபா யோகா மற்றும் ஆயுர்வேதத்தை கொரோனா வைரஸுக்கு எதிரான தீர்வாக பரிந்துரைத்தார். கொரோனா வைரஸ் உள்ளிட்ட கொடிய நோய்களைத் தடுக்க ஒரு நல்ல எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டியதையும் யோகா குரு வலியுறுத்தினார். இவரைப் பொறுத்தவரை, சூர்ய நமஸ்காரம், பிராணயம் மற்றும் கபல் பதி போன்ற யோகா நிலைகள் ஒருவரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க ஆயுர்வேத மூலிகையான அமிழ்தவள்ளியை உட்கொள்ள வேண்டும் என யோகா குரு பரிந்துரைத்தார்.
ஆதாரம் இல்லை
இதுவரை மூலிகை வைத்தியம் கொரோனா வைரஸை எதிர்க்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்புடன் இருக்க, அந்த வைரஸ் தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் என உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். எனவே இதற்கு ஒரு தீர்வு காணும் வரை, நாம் ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் தொடர வேண்டும்.
கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள்:
* அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்யுங்கள்.
* இருமல் உள்ளவர்கள் அல்லது தும்முபவர்களிடம் இருந்து குறைந்தது 3 அடி இடைவெளியைப் பின்பற்றுங்கள் .
* கைகளை சுத்தம் செய்யாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடாதீர்கள்.
* தும்மும் போது அல்லது இருமலின் போது, வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடிக் கொள்ளுங்கள்.
* உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.