தினமும் ஆளி விதை உட்கொண்டால் சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். மேலும் கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகிறது.
ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும், எண்ணெய் வித்துக்களில் முக்கியமான ஒன்று என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்து சொன்ன பிறகே பிரபலமாகி வருகிறது. உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த அதிக நார்ச்சத்து மிகுந்த உணவாக உலக அளவில் கருதப்படும் உணவு இது.
பழங்கால எகிப்து, சீனாவில் அதிகம் பயிரிடப்பட்டது. இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இதில் புரதச்சத்தின் முக்கியக்கூறான 12 அமினோ அமிலங்களும் உள்ளன. அதனால் இதை ஒரு ‘முழுமையான உணவு’ என்று கூறலாம்.
இதில் உள்ள ஆல்பா லினோலியிக் ஆஸிட் என்னும் கொழுப்பைத்தான் ‘ஒமேகா-3’ கொழுப்பு என்றும் கூறுவர். இது மிக முக்கிய கொழுப்புச்சத்து. ரத்தக் குழாய்களில் மற்ற கொழுப்புகள் படியாமலிருக்க செய்யும். அதனால் மாரடைப்பு வராமலிருக்க உதவும். ஆஸ்துமா, பார்க்கின்ஸன்ஸ் எனப்படும் சீக்கிரம் வயதான தோற்றமளிக்கும் வியாதியைத் தடுக்கும் சத்துகளைக் கொண்டது.
ஆளி விதையை உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். பெண்களின் மெனோபாஸ் காலங்களில் திடீரென உடல் சூடாவது போலவும் குளிர்வது போலவும் அதிகம் வியர்ப்பது போலவும் ஏற்படும். ஹாட் பிளஸ்ஸ் உணர்வு, உடலில் ‘ஈஸ்ட்ரோஜன்’ என்னும் ஹார்மோனின் சுரப்பில் வித்தியாசம் ஏற்படுவதால் வருகிறது. ஆளி விதையில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹாட் பிளஸ்ஸ்’யை குறைக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆளி விதையில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து, கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து இரண்டுமே பல வகைகளில் நமக்கு நன்மை செய்யும். மலச்சிக்கலைத் தடுக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மிகுந்துள்ளதால் புராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மலக்குழாய் புற்றுநோய் போன்றவை வராமல் பாதுகாக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆளி விதை உட்கொண்டால் மூட்டுவலியைக் குறைக்கும். சருமத்துக்கும் நமது தலைமுடிக்கும் மினுமினுப்பைத் தரும். ஆளி விதை உட்கொள்வதன் மூலம் தோலின் ஈரத்தன்மை பாதுகாக்கப்படுவதால், தோல் வறட்சி, கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகிறது.
மேலும் தோலின் உணர்திறன் அதிகரிப்பதாகவும், தோலின் கடினத்தன்மையைப் போக்குவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருந்தாலும், கர்ப்பிணிகள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.-Source: maalaimalar