அழகான, பொலிவான, மிருதுவான, சுருக்கமில்லாத சருமம் வேண்டும் என்பது தான் அனைத்து பெண்களின் அதிகப்பட்ச ஆசையாக இருக்கும். சருமத்தில் சிறு பருவோ அல்லது கரும்புள்ளியோ ஏற்பட்டு விட்டால் அதை போக்கும் வரை வேறு நினைப்பே வராது பலருக்கு. இன்றைய மாசடைந்த சூழலில் சரும பாதுகாப்பு இன்றியமையாததாக மாறிவிட்டது.
சரும பாதுகாப்பிற்கென்று செலவை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அழகு சாதனப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி சருமத்தை பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் சிலருக்கு ஏற்றதாக இருந்தாலும், சிலருக்கு பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, வெளியே வாங்கும் செயற்கை அழகு சாதனப் பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்களை பயன்படுத்துவதே எவ்வித பக்கவிளைவுமின்றி, சரும பாதிப்பை தடுத்திடும் சிறந்த வழியாகும். உங்கள் சரும பிரச்சனைக்கு சிறந்த இயற்கை பொருளாக எதை தேர்ந்தேடுப்பது என்ற கவலை இருந்தால் தேனை பயன்படுத்தி பாருங்களேன்…
தேனின் நற்குணங்கள்
தேனானது உலக அளவில், மக்களால் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்டுகளுடன் பல்வேறு நன்மைகளும் மறைந்துள்ளன. இதை ஒரு இனிப்பு மருந்து என்றே கூறலாம். உடல் எடை குறைப்பு முதல் சிறந்த ஆன்டி பாக்டீரியலாகவும், நீர்ச்சத்தும் இதில் அதிகமாக பொதிந்துள்ளது. அதனால் தான் சரும பிரச்சனைகளுக்கு சிறந்த பலனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
பருவை போக்க…
முகப்பருவால் அவதிப்படுபவர்கள், வெதுவெதுப்பான நீரால் முகத்தை அலசிவிட்டு, தேனை முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின்னர், முகத்தை கழுவி விடவும். வாரத்திற்கு 2 முதல் 3 முறையாவது இதனை செய்யவும். முகப்பரு பிரச்சனை மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தேனை ஒரு கிளின்சராகப் பயன்படுத்தலாம்.
இறந்த செல்களை நீக்க…
ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும், ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் சந்தனப் பவுடர்ஆகியவற்றை ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதை செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
எண்ணெய் பசையை அகற்ற…
2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர், அரை டேபிள் ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள பேஸ்டை முகத்தில் கை கொண்டோ அல்லது பிரஷ் கொண்டோ தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இதனை அப்படியே விட்டுவிட்டு, பின்பு கழுவிடலாம். பின் முகத்தை லேசாக துடைத்துவிட்டு, மாஸ்சரைசர் தடவவும்.
பொலிவான சருமம் பெற…
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவிடவும். இது முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, சருமத்தை ஒளிரச் செய்திடும். நீர்ச்சத்து நிறைந்த கிளிசரின் முகத்திற்கு இயற்கை பொலிவை தரக்கூடியது. மஞ்சள் சருமத்தின் நிறத்தை கூட்ட உதவும்.
வறண்ட சருமத்தைப் போக்க…
ஒரு டேபிள் ஸ்பூன் பால், ஒரு டேபிள் ஸ்பூன் தேன் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலந்து, பஞ்சு கொண்டு முகத்தில் தடவவும். முகத்தில் தடவிய கலவை நன்கு காய்ந்ததும், தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிடவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேன் மற்றும் பால் இயற்கை மாய்ஸ்சுரைசராகவும், பாலில் கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளது. எனவே, இதனை தொடர்ந்து செய்து வர சருமத்தின் வறட்சி நீங்கி, ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
முதுமை தோற்றத்தை விரட்ட…
முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அத்துடன் தேன் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் காய விடவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யவும். முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மிருதுவாக்கி, சுருக்கத்தை நீக்கி, இளமை தோற்றத்தை தரும். மேலும் முகத்தில் உள்ள கறைகளை நீக்கி இளமை தோற்றத்தை தந்திடும்.