27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
hand bag
அலங்காரம்ஃபேஷன்

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

ஆடை ஆபரணங்கள் மட்டுமல்ல, தாங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள் பெண்கள். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள்.

வாங்கிய சில நாள்களுக்குப் பிறகு கையில்வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் பையில் அடைத்துவிடுவார்கள். பொருள்கள் சேரச் சேர, பையின் எடையும் அதிகரிக்கத் தொடங்கும். `இப்படி அதிக எடையுள்ள பையைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், தோள்பட்டைவலி தொடங்கி, முதுகுத்தண்டுவட பாதிப்புவரை எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படலாம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

hand bag

“ஹேண்ட்பேக்கில் எதை வைக்க வேண்டும் என்றில்லாமல், அதிக எடையுள்ள பொருள்களை உள்ளே திணித்து, அவற்றை தினமும் சுமப்பது ஆரோக்கியமின்மைக்கான திறவுகோல். குறிப்பாக, ஒரு பக்கமாகப் பயன்படுத்தும் ஹேண்ட்பேக்கில் கனமான பொருள்களை வைத்து சுமப்பது ஆபத்தானது. இதுபோல தினமும் அதிக எடையைச் சுமக்கும் பெண்களுக்கு முதுமையைத் தொடும் முன்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படத் தொடங்கிவிடும்” என எச்சரிக்கிறார் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கண்ணன்.

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு அவர் தரும் ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

எதில் கவனம் தேவை?

ஹேண்ட்பேக் மற்றும் அதன் உள்ளேவைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் எடை மற்றும் அளவு, ஸ்ட்ராப்பின் நீளம் போன்றவைதான் சம்பந்தப்பட்டவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீளம் அதிகமுள்ள, தடிமனான ஸ்ட்ராப் வகைகளைப் பயன்படுத்துவதே சிறப்பு.

* பை தயாரிக்க எந்த வகைத் துணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுகூட பிரச்னையைத் தீர்மானிக்கும். தடிமனான தோல் அல்லது ரெக்ஸினால் செய்யப்பட்டிருந்தால், தசைகளில் அழுத்தமாகப் பதிந்து அந்தப் பகுதியில் வலியை ஏற்படுத்தும். பிரச்னை அதிகரிக்கும்போது, நரம்புகள் பாதிப்படைந்து அவை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே, தரமான மற்றும் எடை அதிகமில்லாத துணிகளில் தயாரித்த பைகளை மட்டுமே வாங்கவும்.

* ஒருபக்கமாக ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு சென்றால், தோள்பட்டையில் வலி ஏற்படுவதுடன், உடலின் அமைப்பிலும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, வலது பக்கம் ஹேண்ட்பேக் தொங்கவிடுபவர்களுக்கு, காலப்போக்கில் வலது தோள்பட்டை சற்று கீழ்நோக்கியும், இடது தோள்பட்டை சற்று மேல்நோக்கியும் மாறும். இதன் காரணமாக, பின்முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

* அதிக எடையுள்ள ஹேண்ட்பேக்கைச் சுமப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான அடிப்படை. எனவே, தினமும் ஹேண்ட்பேக்கைச் சுத்தப்படுத்தவும். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும். தேவையில்லாத பொருள்களை அகற்றவும்.

* பேருந்து, ரயிலில் உட்கார இடமில்லாமல் தோள்களில் பையைத் தொங்கவிட்டபடி, நின்றுகொண்டே பயணிப்பவர்கள் தோளில் ஒருபக்கமாகச் சுமந்து செல்வது ஆபத்தானது. வருடக்கணக்கில் இப்படிச் சுமைகளுடன் பயணப்பட்டால், தசைகளில் பிரச்னை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வலி எடுக்கத் தொடங்கும். இதனால் காலப்போக்கில் தசைப்பிடிப்பு, பின்முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுத் தேய்மானம், குடலிறக்கம், டிஸ்க் தேய்மானம் போன்றவை ஏற்படக்கூடும். தீவிரமான தலைவலி ஏற்படுவது இவற்றின் முதல்நிலை. அதைத் தொடர்ந்து, தேவையில்லாத மனஉளைச்சல் ஏற்படக்கூடும்.

25, 30 வயதைத் தொடும் இளம்பெண்கள்கூட தாங்க முடியாத கழுத்துவலியால் அவதிப்பட இதுவும் ஒரு காரணம்.

* கழுத்துவலியோ, தோள்பட்டைவலியோ எதுவாக இருந்தாலும், அதை உதாசீனப்படுத்த வேண்டாம். இவற்றில் மூட்டு சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அந்த வகையில், முதல்நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தும் வேலையைத் தொடங்குவதே நல்லது.

ஹேண்ட்பேக் நிர்வாகம் தெரியுமா?

முதலில் தேவையானவை, தேவையில்லாதவை என உங்களிடம் உள்ளவற்றைப் பிரித்துவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பையை, இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒருபுறம் அத்தியாவசியத் தேவைகளையும், மற்றொருபுறம் ஆடம்பரத் தேவைகளையும் வைப்பது நல்லது. இங்கு ஆடம்பரப் பொருள்கள் என்பவை, தற்காலிகமாகவோ குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமோ வைத்திருக்கும் பொருள்கள். இது ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, சிலருக்கு சன்கிளாஸ் அத்தியாவசியம், அது சிலருக்கு ஆடம்பரம். எனவே, தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து, பொருள்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.

அத்தியாவசியப் பொருள்களின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ற பை வாங்கிக்கொள்ளுங்கள். தற்காலிகமாக இருக்கும் பொருள்களை, அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். வேண்டாமென்பதை, தாமதிக்காமல் நீக்கிவிடுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப் பிரித்துவைத்து, பையை அடுக்குவது நல்ல பழக்கம். தினமும் நேரம் கிடைக்காதவர்கள், வாரக் கடைசியில் பையைச் சுத்தப்படுத்தும் பணியை வைத்துக்கொள்ளுங்கள்.

ஹேண்ட்பேக் தேர்ந்தெடுக்கும்போது…

* முடிந்தவரை இரண்டு கைகளுக்கும் பொருந்தும் பைகளைப் பயன்படுத்தவும். ஒருபக்கப் பை என்றால், நீளமான பைகளாக வாங்கிக்கொள்ளவும். அதை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாட்டிக்கொள்ளவும்.

* ஒருபக்கப் பைகளை, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி, சமமான நேரம் தொங்கவிட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கைகளை மாற்றிக்கொள்வது சிறப்பு. பை இருக்கும் தோள்பட்டையில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாகக் கையை மாற்றிக்கொள்ளவும்.

* தடிமனான ஸ்ட்ராப்கொண்ட, நீளமான ஹேண்ட்பேக் வகைகளைப் பயன்படுத்தவும்.

* ஒருபக்க ஹேண்ட்பேக்கில், இடுப்புக்கு அருகே பையின் அடிப்பகுதி வருமாறு இருக்க வேண்டும். அந்தளவுக்கு நீளம் அவசியம்.

* எடை அதிகமுள்ள பொருள்களை, பையின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவும். எடை குறைவான பொருள்கள், மேலே இருக்க வேண்டும்.

வலியைப் போக்கும் பயிற்சிகள்!

வலி ஏற்படாமலிருக்க, கழுத்துப் பகுதிக்கான கீழ்க்காணும் உடற்பயிற்சிகளைச் செய்துவரவும்.

* வலமிருந்து இடம், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என 30 விநாடிகளுக்குக் கழுத்தை மெதுவாகச் சுழற்றி பயிற்சி செய்யவும். பயிற்சி செய்யும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து, வெளியேவிடவும்.

* முதுகுத்தண்டு நிமிர்ந்தபடி, கால்கள் தரையில் பதியுமாறு அமரவும். வலது கன்னத்தில் வலது கையை வைத்துக்கொண்டு, மெதுவாக இடது பக்கம் கழுத்தைத் திருப்பவும். ஐந்து நொடிகளில் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி வலது, இடது என இரண்டு பக்கமும் செய்யவும்.

* முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும்படி நாற்காலியில் அமர்ந்து, இரு கைகளையும் கோத்துக்கொள்ளவும். கட்டை விரல்களைத் தாடையின் அடியில் வைக்க வேண்டும். தாடையில் கைவைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழையநிலைக்கு வர வேண்டும். இதேபோல, தலையின் பின்புறம் கைகளைக் கோத்து, கழுத்தை மெல்லக் கீழே அழுத்த வேண்டும்; பழையநிலைக்கு வர வேண்டும்.

எலும்புகளை கவனியுங்கள்!

நம் எலும்புகளுக்குத் தேவையான அன்றாட கால்சியத்தைப் பெற ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் போதுமானது. 30 வயதுக்குப் பிறகு நம் எலும்புகளின் அடர்த்தி மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும் 1,000 மி.கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

Related posts

பெண்களை கவரும் வண்ணமயில் ஆபரணம்

nathan

கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

sangika

விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்

nathan

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க…:

nathan

கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

ஆடைகளுக்கு அழகு சேருங்கள்

nathan

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

இத்த‍னை வகைகளா? – பெண்கள் விரும்பி அணியும் சல்வார்!…

sangika

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan