இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு வகையான சரும பிரச்சனை தான் சீழ் நிறைந்த பருக்கள். இம்மாதிரியான பருக்கள் மயிர் கால்களை பாக்டீரியாக்கள் ஆழமாக தாக்குவதால் வரும். இந்த வகை பருக்கள் கடுமையான வலியைத் தரும். மேலும் இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும். பெரும்பாலும் இம்மாதிரியான பருக்கள் கைகளுக்கு அடியில் தான் வரும்.
இந்த வகை பருக்கள் வரும் போது ஆரம்பத்தில் அவ்விடம் லேசாக சிவந்து காணப்படும். பின் அவ்விடத்தில் அரிப்பை சந்திக்க நேரிடும். அதன் பின் சீழ் நிறைந்த பருக்களாக மேலே எழ ஆரம்பித்து, அதன் அளவு மற்றும் வடிவம் பெரிதாக ஆரம்பிக்கும். இம்மாதிரியான பருக்களை தொட்டாலே கடுமையான வலியை சந்திக்க நேரிடும். சிலருக்கு இந்த வகை பருக்கள் முகத்தில் அதிகமாக இருக்கும்.
இதற்கு காரணம் எண்ணெய் பசை சருமம் மட்டுமின்றி, வெளியே அதிகம் சுற்றுவதால் கிருமிகள் சருமத்தை தாக்கி, சருமத்துளைகளினுள் நுழைந்து, ஆழமான பாதிப்பை ஏற்படுத்துவது தான். இந்த பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது.
ஆனால் இந்த பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகளின் மூலம் தீர்வு காண முடியும். குறிப்பாக நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே, சீழ் நிறைந்த பருக்களுக்கு தீர்வு காணலாம். சரி, இப்போது சீழ் நிறைந்த பருக்களை விரைவில் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம்.
வேப்பிலை * வேப்பிலை சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த மற்றும் வலிமிக்க பருக்களைப் போக்க உதவும். * அதற்கு ஒரு கையளவு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். * இல்லாவிட்டால், நீரில் வேப்பிலையைப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் முகத்தை தினமும் 2-3 முறை கழுவுவதன் மூலமும், சீழ் நிறைந்த பருக்களை மறையச் செய்யலாம்.
கருஞ்சீரகம் * கருஞ்சீரகம் பல்வேறு வகையான சருமத் தொற்றுக்களைப் போக்க வல்லது. இதில் உள்ள மருத்துவ பண்புகள், பருக்களால் ஏற்படும் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். * அதற்கு ஒரு கையளவு கருஞ்சீரகத்தை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை பருக்களின் மீது தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். * வேண்டுமானால், கருஞ்சீரகத்தை சாப்பிடலாம். இதன் மூலமும் சீழ் நிறைந்த பருக்களை சரிசெய்யலாம்.
பிரட் மற்றும் பால் * பிரட் மற்றும் பால் கொண்டும் எளிதில் சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்கலாம். * அதற்கு பிரட்டை சூடான பாலில் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நிலையில்அதை சீழ் நிறைந்த பருக்களின் மீது வைத்தால், அவ்விடத்தில் உள்ள கிருமிகளை அழித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, விரைவில் மறையச் செய்யும். * இச்செயலை தினமும் 2 முறை செய்து வந்தால், சீக்கிரம் பருக்கள் மறைந்துவிடும்.
டீ-ட்ரீ ஆயில் * டீ-ட்ரீ ஆயிலில் எண்ணற்ற ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளன. * இந்த எண்ணெயை பஞ்சுருண்டையில் நனைத்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி வர, பருக்களால் ஏற்படும் வலி நீங்குவதோடு, பருக்கள் விரைவில் மறைய ஆரம்பிக்கும்.
மஞ்சள் * மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் மசாலாப் பொருள். இதை நேரடியாக சீழ் நிறைந்த பருக்களின் மீது தூவலாம். இதனால் இவ்விடத்தில் இருந்து வெளிவரும் இரத்தக்கசிவு தடுக்கப்படும். * இல்லாவிட்டால், பாலில் மஞ்சள் தூளைக் கலந்து குடிக்கலாம். இதனாலும் சீழ் நிறைந்த பருக்கள் வருவதைத் தடுக்கலாம். மஞ்சள் இரத்தத்தை சுத்தம் செய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஏராளமாக கொண்ட பொருள் என்பதால் விரைவில் நல்ல பலனைத் தரும்.
வெதுவெதுப்பான நீர் ஒத்தடம் * சுடுநீரில் நனைத்த துணியால் சீழ் நிறைந்த பருக்களின் மீது ஒத்தடம் கொடுப்பதால், வலி குறைவதோடு, அவ்விடத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து விரைவில் பருக்கள் குணமாகும். * அதற்கு சுடுநீரில் நனைத்த துணியை சீழ் நிறைந்த பருக்களின் மீது 10 நிமிடம் வைக்க வேண்டும். வேண்டுமானால் சுடுநீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் நனைத்த துணியையும் பயன்படுத்தலாம். * இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்ய, நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காயம் * வெங்காயத்தில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இது சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். * அதற்கு ஒரு துண்டு வெங்காயத்தை, நேரடியாக பருக்களின் மீது வைத்து, ஒரு துணியால் கட்டிக் கொள்ளுங்கள். சில மணிநேரங்கள் இப்படியே விட்டுவிடுங்கள். பின்பு துணியை கழற்றுங்கள். * இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்யுங்கள். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் விரைவில் குணமாகி மறைந்துவிடும்.
பூண்டு * வெங்காயத்தைப் போன்று பூண்டும் சருமத்தில் உள்ள சீழ் நிறைந்த பருக்களை போக்க உதவும். * அதற்கு 2-3 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவவும். * இல்லாவிட்டால் ஒரு பல் பூண்டை சூடேற்றி, அதனை பருக்களின் மீது 10 நிமிடம் வைக்கவும். * இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்ய வேண்டும். * வேண்டுமானால், தினமும் 2 பல் பூண்டை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம், சரும பிரச்சனை நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.