நம் முடியின் வேர்ப்பகுதி, மண்டைத்தோலில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். இதை செபாஷியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) என்று சொல்வோம். இதில் இருந்து ‘சீபம்’ என்ற எண்ணெய் சுரக்கிறது. ஒரு சிலருக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ சுரக்கலாம். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.
எண்ணெய்ப் பசை, வறட்சி என எந்த வகைக் கூந்தலை உடையவராக இருந்தாலும், வெளியில் போகும்போது எண்ணெய் தடவிக்கொண்டு சென்றால், சூழலில் உள்ள தூசு, அழுக்கு, உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய் போன்ற அனைத்தும் சேர்ந்து, பொடுகைக்கொண்டு வந்துவிடும். எனவே, வெளியில் செல்பவர்கள் எண்ணெய் தடவிக்கொண்டு செல்லக் கூடாது.
எண்ணெயைக் கூந்தலில் தடவி, 20 நிமிடங்கள் ஊறிய உடனே அலசிவிட வேண்டும். இரவில் தடவி, மறுநாள் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயைக் கூந்தலில், சருமத்தில் பூசிக்கொண்டு வெளியே செல்லும்போது சூரிய வெப்பத்தை நேரடியாக இழுத்து சருமம், கூந்தலைப் பாதிக்கும்.
தினமும் காலை கூந்தலை அலசுவதால், முதல் நாள் படிந்த தூசு, அழுக்கு நீங்கிவிடும். சைனஸ், தலைவலி, சளித் தொந்தரவு உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை, 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவிய பின் கூந்தலை அலசலாம்.
இயன்றால், மாலையில் கூந்தலை அலசுவது நல்லது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ததால் ஏற்பட்ட அழுக்கு நீங்கி, முடி கொட்டுவது தடுக்கப்படும்.