நாம் என்ன செய்ததால் இந்த விளைவு என்று யோசிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசினால் அடுத்தடுத்து சருமத்தில் பருக்கள்,கரும்புள்ளிகள் தோன்றிடும். இப்படி சருமத்தின் நிறம் மாறுவதால், அல்லது முகத்தில் பருக்கள் தோன்றுவதால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். யார் யாரோ சொல்வதைக் கேட்டு முகத்தில் என்னவெல்லாமோ தடவி தினம் தினம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ பார்லர்களுக்கு காசை விரயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பணம் அதிகமாக செலவழிக்காமல் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே இந்தப் பிரச்சனைக்கு எளிய தீர்வு இருக்கிறது.
பொதுவாக பரு என்றால் நாளடைவில் அதுவாக மறைந்துவிடும் என்கிற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் அதனை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையாய் அமைந்திடும். பருவைத் தவிர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மறையவே மறையாது. அப்படியே நிலைத்து விடும் என்றும் சொல்லப்படுகிறது இது தவறானது. முகத்தை முறையாக பராமரித்தால், சில குறிப்புகளை பின்ப்பற்றினால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை நீங்கச் செய்திடலாம்.
பேக்கிங் சோடா : பேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும்.வாரம் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.
தேன் : தேனில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகம் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் இந்த முறையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம். தேன் சருமத்திற்கும், கரும்புள்ளிகளைநீக்குவதற்கும் சிறந்தது. இதனை முகத்திற்கு போடும் மாஸ்க்கிலோ அல்லது தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வருவதோ நல்லது.
க்ரீன் டீ : க்ரீன் டீயில் இருக்கும் எண்ணற்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நம் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதற்கு பயன்படுத்திய டீ இலைகளை பயன்படுத்தலாம். க்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்திடுங்கள்.
பட்டை : இதனை நீங்கள் தினமும் கூட முயற்சிக்கலாம். பட்டையை முதலில் பொடியாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடலாம். வேண்டுமானால் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளலாம். இது நிறைந்த பலனைத் தரும்.
எலுமிச்சை சாறு : தினமும் எலுமிச்சை பாதியாக நறுக்கி அதை அப்படியே முகத்தில் தேய்க்கலாம். அதிக எரிச்சல் இருந்தால் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவலாம். எலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றறிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரிக்கும்.
ஓட்ஸ : ஓட்ஸை முதலில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் தயிர் கலந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை முகத்திற்கு மாஸ்க்காக போட்டு இருபது நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படிச் செய்வதால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சருமம் நீங்கிடும். இதனால் சருமத்தில் அதிகப்படியான அழுக்கு சேர்வது தவிர்க்கப்படும்.
முட்டையின் வெள்ளைக்கரு : இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்திடுங்கள். முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து நன்றாக கலக்கினால் கெட்டியாக மாறிடும். அந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காக போட வேண்டும். அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் கழுவி விடுங்கள்.அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றிடுவதால் , கரும்புள்ளிகளைப் போக்கும்.
சர்க்கரை : சர்க்கரை நம் சருமத்தில் இருக்கும் துவாரங்களை எல்லாம் அடைத்து சுருக்கங்களை போக்குகிறது. அதோடு சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தினையும் கொடுக்கிறது. இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கண்களைத் தவிர்த்து முகத்தின் பிற இடங்களில் எல்லாம் போட்டு மசாஜ் செய்ய வேண்டும். ஆல்வி எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெயும் பயன்படுத்தலாம்.
பால் : பாலைக் கொண்டு தினமும் உங்கள் முகத்தை சுத்தம் செய்தால் கரும்புள்ளி பிரச்சனையே இருக்காது. சுத்தமான பாலை பஞ்சில் நனைத்து அதனை உங்கள் முகத்தில் துடைத்தெடுக்கலாம். பால் மிகச்சிறந்த க்ளன்சராக செயல்படும். முகத்தில் இருக்கும் அழுக்குகளை எல்லாம் நீக்கிடும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி நீங்குவதோடு சருமம் மென்மையாகவும் மாறிடும்.
வெந்தயம் : முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதனைத் தீர்க்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்குவதில் வெந்தயம் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்திடுங்கள். மறு நாள் காலை அதனை அரைத்து அந்த விழுதினை முகத்தில் மாஸ்க்காக போட்டுக் கொள்ளுங்கள். இருபது நிமிடங்கள் ஊறிய பின்னர் கழுவி விடலாம்.
உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கினை பேஸ்ட் செய்து சருமத்தில் மாஸ்க்காக போடலாம், அல்லது உருளைக் கிழங்கை நறுக்கி முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். உருளைக்கிழங்கு அரைத்து சாறு எடுத்து அதனையும் தடவலாம். இப்படிச் செய்வதால் சருமத்திற்கு சிறந்த ப்ளீச்சிங் செய்த பலன் தோன்றும். இதனை நீங்கள் வாரம் இரண்டு முறை செய்திடலாம்.
கஸ்தூரி மஞ்சள் : தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது . மார்க்கெட்டில் இருக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிக்கலாம். அல்லது இந்த மஞ்சளுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள்.
பாதாம் : தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் முகத்தை பாதாம் எண்ணெயைக் கொண்டு தடவிடுங்கள். மறு நாள் காலை குளித்து விடலாம். இல்லையென்றால் நான்கைந்து பாதாமை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காக போட வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது.
வினிகர் : நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் விஷயங்களில் வினிகரும் முதன்மையானது. இதனை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமத்தில் தோன்றிடும் வறட்சி, கரும்புள்ளிகளை நீக்க உதவிடும். ஒரு ஸ்பூன் வினிகரை மூன்று ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து முகம் முழுவதும் தடவ வேண்டும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் இதனை முகத்தில் பயன்படுத்துவதால் முகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் குறைந்திடும்.
ஸ்ட்ராபெர்ரீ : ஆப்பிள் பழத்தில் உள்ள சத்தை விட ஸ்ட்ராபெரியில் அதிகம் சத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள, பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோப்ளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ,
டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளம் உள்ளன.
ஸ்ட்ராபெரி பழத்தை அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரத்துக்கு, 3 முறை இதுபோன்று செய்தால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தை கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதா கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.