ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை பின்பற்றினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வெயில் காலத்தில் வரும் பொடுகு பிரச்சனைக்கு உடனடி தீர்வு
எத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது வாசனை தைலம் போன்ற நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. அதனால் பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை தவிர வேறு வழியில்லை.
சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர், 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தலை வறட்சி ஏற்பட்டால், வாரம் ஒருமுறை நல்லெண்ணை தேய்த்து ‘ஆயில் பாத்’ எடுப்பது நல்லது. பசலை கீரையை அரைத்து தலையில் அரப்பு போல் தேய்த்து குளித்தால் பொடுகை கட்டுப்படுத்தலாம். பொடுகு வர உடல் சூடு முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால், சூடு தணிக்கும் வெந்தய பவுடரை தலையில் தேய்த்து முழுகினால், பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும். வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்தும் தலையில் தேய்க்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தேய்க்கலாம். குளித்து முடித்த பின் தலையை துவட்டாமல், கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் தோய்த்து திரும்பவும் குளித்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
அரைத்த மருதாணி இலையை கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் பூசலாம். வேப்பிலையுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் குளிக்கலாம்.
தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும். நெல்லி முள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் கேட்டு வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறியபின் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு முழுகி வந்தால் பொடுகு குறையும்.