அழகான கண்களுக்கு, கண் இமைகள் அடர்த்தியாக இருப்பதும் ஒரு காரணம். அடர்த்தியான கண் இமைகள் பலருக்கும் இருப்பதில்லை. கண் அழகை மெருகேற்றும் கண் இமை முடிகளின் ஆரோக்கியத்துக்கும் வளர்ச்சிக்கும் சில டிப்ஸ்.
இமைகள் குளிர்ச்சியடைய
ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்வதற்கு முன், ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயை கண் இமை முடிகளில் தடவிக்கொள்வது குளிர்ச்சியைத் தரும்.
இமைகள் வளர
எலுமிச்சையின் தோல்களைச் சீவி, அவற்றை ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். அந்த எண்ணெயை, கண் இமை முடிகளில் தொடர்ந்து தடவி வர, இமை முடிகளின் வளர்ச்சி சீராகும்.
இயற்கை அழகு
இமைகளின் மேல் ரசாயனங்கள் நிறைந்த மஸ்காராவை பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட கண் மைகளைப் பயன்படுத்தலாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு அவற்றை அகற்றிவிட வேண்டும்.
கிரீன் டீ பேக்
குளிர்விக்கப்பட்ட கிரீன் டீயை பஞ்சில் தோய்த்து கண் இமைகளின் மேல் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். இதில் இருக்கும் ஃப்ளேவனாய்டு, இமை முடியின் ஆரோக்கியத்தைத் தக்கவைப்பதுடன் வளர்ச்சியைத் தூண்டும்.
கர்லரைத் தவிர்
கண் இமைகளில் ‘கர்லர்’ (Curler) பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், கண் இமை முடிகள் பாதிக்கப் படலாம். அவசியமெனில், மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் கர்லர் பயன்படுத்துங்கள்.
இமைகளுக்கு மசாஜ்
கண்களை மூடிக்கொண்டு, இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் தர வேண்டும். இதனால், கண்களில் ரத்த ஓட்டம் சீரடையும். இமை முடிகளின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
சரிவிகித உணவு
வைட்டமின் சி, இ, தயாமின், நியாசின் உள்ளிட்ட பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவும், நம் கண் இமை முடிகளின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு ஆற்றும்.
கற்றாழை ஜெல்
தூங்கச் செல்வதற்கு முன்பு இமை முடி மீது ஃபிரெஷ் கற்றாழை ஜெல்லைத் தடவலாம். கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்கள் இமை முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் வலிமையானதாகவும் மாற்றுகிறது.