வயது அதிகரிக்கும் போது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவு குறைய ஆரம்பித்து, அதனால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை வர ஆரம்பிக்கும். இது முதுமைத் தோற்றத்தைத் தரும். அதிலும் தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் இளமையிலேயே பலரும் முதுமையுடன் காட்சியளிக்கின்றனர்.
இதனைத் தடுக்க சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். அதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை அவ்வப்போது முகத்திற்கு போட வேண்டும். இங்கு சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்கும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
முட்டை ஃபேஸ் மாஸ்க் முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் ஏராளமாக உள்ளது. இது சருமத்தை இறுகச் செய்து, சரும சுருக்கத்தைப் போக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்துள்ள சருமத் துளைகள் மூடப்படும், சரும சுருக்கம் மறைந்து, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
கொய்யா மற்றும் கேரட் ஃபேஷியல் மாஸ்க் கொய்யா மற்றும் கேரட்டில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும். அதற்கு பாதி கொய்யா மற்றும் கேரட்டை எடுத்து ஒன்றாக அரைத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய் மற்றும் முட்டை ஃபேஷியல் முட்டை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஷியல் சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும். அதற்கு பாதி வெள்ளரிக்காய், 1 முட்டையின் வெள்ளைக்கரு, சிறிது சோள மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் 2 துளிகள் நறுமண எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
அவகேடோ மற்றும் கிவி மாஸ்க் அவகேடோ மற்றும் கிவி பழங்கள் சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்கும். எனவே பாதி அவகேடோ மற்றும் பாதி கிவி பழத்தை ஒன்றாக சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
க்ரீம் ஃபேஷியல் மாஸ்க் க்ரீம் ஃபேஷியல் மாஸ்க், கொலாஜென் அளவை அதிகரிக்க உதவும். 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, தேன் மற்றும் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த மாஸ்க் போட்ட பின், மாய்ஸ்சுரைசரைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.