இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் காணப்படும்.
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி
இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், மாசடைந்த சுற்றுச்சூழலால் தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக நார் போன்று காணப்படும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் செம்பருத்தி குறிப்பிடத்தக்கவை.
இப்போது செம்பருத்தியின் பொடியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என காணலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் செம்பருத்தி பொடியையும் பயன்படுத்தலாம். செம்பருத்தி பொடி என்பது செம்பருத்தி இலை, பூ இரண்டும் சேர்ந்தது.
தலைமுடி பலவீனமாக இருந்தால் தான் உதிர ஆரம்பிக்கும். ஆகவே இதன் வலிமையை அதிகரிக்க, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் தேங்காய் பாலுடன், 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், தலைமுடி வலிமையாக இருக்கும்.
செம்பருத்தி பவுடர் நல்ல ஹேர் கிளின்சராகவும் பயன்படுகிறது. அதற்கு செம்பருத்தி பொடியை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் மோர் மற்றும் செம்பருத்திப் பொடியுடன் சேர்த்து ஊற வைத்து, மறுநாள் காலையில் இக்கலவையை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகில் இருந்து விடுபடலாம்.
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு செரும்பருத்தி பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு ஊற வைத்து பின் அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறையும்.
செம்பருத்தி பூ மற்றும் இலையை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் ஆலிவ் ஆயில் மற்றும் நீர் சேர்த்து கலந்து, தலைமுடியின் முனை வரை தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் அலச வேண்டும்.
செம்பருத்தி பொடி மற்றும் மருதாணி பொடியை ஒன்றாக கலந்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து அலச, நல்ல பலன் கிடைக்கும்.