பழங்களின் நன்மைகளை சொல்ல வார்த்தைகள் பத்தாது எல்லா பழங்களுமே சத்து மிகுந்தவை. அதிலும் ஆரஞ்சு பழத்தின் சத்துக்கள் உடலிற்கு பல அற்புதங்கள் தருபவை. அது போலவே அழகை கூட்டுவதிலும் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஆரஞ்சு தோல் மற்றும் பழம் இரண்டுமே அழகை அள்ளித் தருபவை.
கூந்தல் மற்றும் சருமம் இரண்டிற்குமே பயன்படுத்தலாம். வெறுமனே உபயோகிப்பதை விட அதனை எதனுடன் கலவையாக உபயோகிக்கிறீர்கள் என்பது முக்கியம். இதனால் இதன் பலன் இரட்டிப்பாகிறது. சுருக்கம், பொடுகு, என பல பிரச்சனைகளையும் போக்கி அழகை கூட்டுகிறது. எப்படி என பார்க்கலாமா?
மலர்ந்த கண்கள்வேண்டுமா? கண்கள் சுருங்கி, சோர்வாக இருந்தால் மிக எளிதான வழி இங்கே உங்களுக்காக. ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச்சென்றாகி விடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.
கூந்தல் வளர : உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.
முகத் தழும்புகள் நீங்க : முகத்தில் முகப்பரு வடுக்கள் நிரந்தரமாக தங்கி விட்டதா? இதைப் பயன்படுத்துங்கள். ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது-1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் – 2 சிட்டிகை. இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இதனால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.
கருமை நீங்க : முகத்தில் ஆங்காங்கே கருமை திட்டு இருக்கிறதா? வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
ஆரஞ்சு ஃபேஸியல் மாஸ்க் : சுற்றுபுற தூசுகளாலும், அழுக்குகளாலும் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். இதற்கு ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வந்தால் ஃபேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.