குளிர் மற்றும் வெயில் காலங்களில், பெரும்பாலான பெண்களுக்கு தவிர்க்க முடியாதது பாத வெடிப்பு. வெறும் கால்களில் நடக்கும் போது கொழுப்பு படிவங்கள் உடைந்து விடுவதால் அழுத்தம் தாங்காமல் தோல் பிய்ந்து கொண்டு வருவதைத்தான் வெடிப்பு என்று கூறுகிறோம்.
இந்த வெடிப்பு எளிதில் குணப்படுத்தக் கூடியதுதான். ஆனால் வாரம் ஒருமுறையாவது சோம்பேறித்தனம் படாமல் பராமரித்து வந்தால் மெத்தென்ற பாதங்களுக்கு சொந்தக்காரியாக வலம் வரலாம். இங்கே சில குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்படுத்தி பயனைப் பெறுங்கள்.
பப்பாளி : பப்பாளியை மசித்து கால்களில் தடவுங்கள். காய்ந்ததும் பப்பாளி தோலினால் குதிகால்களை தேய்த்து கழுவ வேண்டும். தினமும் செய்தால் வெடிப்புகள் மறைந்துவிடும்.
வேப்பிலை மற்றும் சுண்ணாம்பு : ஒரு கைப்பிடி வேப்பிலையில் சுண்ணாம்பு சிறிது சேர்த்து நைஸாக அரைத்திடுங்கள். இதில் சிறிது மஞ்சள் குழைத்து பாதங்களில் தடவி வந்தால் சீக்கிரம் வெடிப்பு குணமாகிவிடும்.
விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெயை சம அளவு எடுத்து அதில் மஞ்சள் 1 ஸ்பூன் அளவு சேர்த்து பாதங்களில் தடவிவிடுங்கள். மென்மையாக மசாஜ் செய்யவும்.
மெழுகு மற்றும் விளக்கெண்ணெய் : இது வெடிப்பு ஆழமாக இருப்பவர்களுக்கு விரைவில் பயன் தரும் அற்புதமான குறிப்பு. மெழுவர்த்தியிலிருந்து திரியில்லாமல் ஒரு துண்டு மெழுகை துண்டாக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணயை எடுத்து லேசாக சுட வைக்கும் போது அதில் ஒரு துண்டு மெழுகு வர்த்தியை போடுங்கள். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திடுங்கள். மெழுகு உருகியதும் அடுப்பை அணைத்து அதனை ஆற வைத்து தினமும் தூங்கப் போகுமுன் பாதங்களில் தடவிக் கொள்ளுங்கள். மிருதுவான மென்மையான வெடிப்புகள் இல்லாத பாதங்கள் ஒரே வாரத்தில் கிடைக்கும்.