டிரை ஹேர். பெண்கள் பலரை புலம்பவைக்கும் பிரச்னை. வறண்ட கூந்தலின் எண்ணெய்ப்பசையை மீட்டு பளபளப்பு கூட்டுவதற்கான பராமரிப்பு வழிகளை வழங்குகிறார், சென்னை, ‘விசிபிள் டிஃபரன்ஸ்’ பார்லரின் உரிமையாளர் வசுந்தரா.
கூந்தல் வறட்சி. காரணங்கள்!
* குளோரின் கலந்த தண்ணீரிலோ, உப்பு நீரிலோ கூந்தலை சுத்தம் செய்தால், சீக்கிரமே வறண்டு போய்விடும்.
* அதிக வெயில் அல்லது அதிக குளிர் சீதாஷ்ண நிலையிலும் கூந்தல் விரைவில் வறண்டுபோகும்.
* மலேரியா, மஞ்சள்காமாலை போன்ற நோய் கண்டவர்களுக்கு கேசத்தின் ஆரோக்கியம் குறைந்துபோகும்.
* புரதம், இரும்புச்சத்து, ஊட்டச்சத்து களின் குறைபாடு கூந்தலைப் பாதிக்கலாம்.
மேற்கண்ட காரணங்களில் உங்களின் கூந்தல் வறட்சிக்குப் பொருந்துவதைக் கண்டறிந்து சரிசெய்யவும்.
பார்லர் ட்ரீட்மென்ட்!
* டிரை ஹேருக்கான பார்லர் ட்ரீட்மென்ட்கள் நிறைய உள்ளன. ஆயில் மசாஜ், அதில் சிறந்தது. இதனால் ரத்த ஓட்டம் தூண்டப்படும், கேசத்துக்கு ஆரோக்கியமும், எண்ணெய்ப்பசையும், பொலிவும் கிடைக்கும்.
* க்ரீம் உடன் உங்கள் கேசத்துக்கு ஏற்றாற்போல் சத்து சேர்த்து ஸ்பா ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். இதில் உங்கள் கேசத்துக்கு என்னவெல்லாம் ஊட்டச்சத்து குறைபாடோ, அவை யெல்லாம் கிடைக்கும்.
ஹோம்மேட் ட்ரீட்மென்ட்!
* ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து, சிகைக்காய் பயன்படுத்தி அலசவும்.
* சிகைக்காய் பயன்படுத்தாதவர்கள் ஷாம்பு போட்டபின் தவறாமல் கண்டிஷனர் பயன்படுத்தவும்.
* ஹென்னாவுடன் முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், நெல்லிக்காய் பொடி ஏதேனும் ஒன்றை கலந்து `பேக்’ போட்டு அலசலாம்.
* ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நல்லெண்ணையில் ஊறவைக்கவும். 2 அல்லது 3 நாட்கள் கழித்து நன்கு ஊறிய பின் இலைகளை வடிகட்டிவிட்டு, அந்த எண்ணெயை கேசத்துக்குத் தைலமாகப் பயன்படுத்தி வரவும்.
* எண்ணெயின் பிசுபிசுப்புத் தன்மையால் அதை தவிர்ப்பவர்கள், மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் சீரம் (கொழுப்பு நீக்கிய எண்ணெய்) வாங்கிப் பயன்படுத்தலாம்.
கூந்தல் ஆரோக்கியத்துக்கான உணவுகள்!
* புரதச்சத்து நிறைந்த சோயா, பனீர், உலர் பழங்கள், கடலை, பருப்பு வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* கீரை, பச்சை காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்
* எள், பால் இரண்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, கேசம் அடர்த்தி பெறுவதோடு பளபளப்பாகும்.
* பச்சைப்பயறு, சுண்டல் போன்றவற்றில் கிடைக்கும் விட்டமின் சத்து வெயில், குளிரிலிருந்து கூந்தலைப் பாதுகாக்க வல்லது.
* தினம் ஒரு கப் தயிர் தவறாது எடுத்துக் கொள்ளவும்.
* தினமும் வெறும் வயிற்றில் பச்சை கறிவேப்பிலை ஒரு கொத்து சாப்பிட்டுவர. முடி உதிர்வது, நரை போன்ற பிரச்னைகளிலிருந்து காக்கும்; கூந்தல் மிருதுவாகும்.