கோடை காலத்தில் கண் கூசும் வெயிலிலிருந்து தப்பிக்க நாம் கூலிங் கிளாஸை நாடுகிறோம்.
சன் கிளாஸ் கண்ணை காக்குமா? வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
கோடை காலத்தில் கண் கூசும் வெயிலிலிருந்து தப்பிக்க நாம் கூலிங் கிளாஸை நாடுகிறோம். இன்று கூலிங் கிளாஸை ஸ்டைலுக்காகவே பலர் அணிய ஆரம்பித்து விட்டனர்.
40 ரூபாய் தொடங்கி 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக விலையில் இன்றைக்கு கூலிங் கிளாஸ்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் கூலிங் கிளாஸ் நல்லதா? என்கிற கேள்வியை எழுப்புவது அவசியமாகிறது. கூலிங்கிளாஸின் சாதக பாதகங்கள் குறித்து பார்க்கலாம்.
”சன் கிளாஸ் எனப்படும் கூலர்ஸ் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கண்களை தாக்காமல் இருப்பதற்கே பயன்படுகின்றன. அல்ட்ரா வயலட் கதிர்களில் UVA, UVB, UVC என மூன்று வகைகள் உள்ளன. இதில் பூமிக்கு வந்து நம்மை தாக்கக்கூடிய கதிர்கள் UVA, UVB ஆகிய இரண்டும்தான். இக்கதிர்களின் தாக்கம் அதிகமானால் கண்களின் ரெட்டினாவில் பாதிப்புகள் ஏற்படும்.
கண்ணில் மேற்புறமாக சதை வளரச் செய்யும். கேட்டராக்ட் என அழைக்கப்படும் கண்புரை நோய் வருவதற்கு முக்கிய காரணியாக அமையும். விவசாயம், கட்டுமானம் ஆகிய கடுமையான வேலைகளை நேரடி சூரிய ஒளியில் செய்பவர்களுக்கு காலப்போக்கில் கேட்டராக்ட் வருவதற்கு அல்ட்ரா வயலட் கதிர்கள்தான் காரணம். இது போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கும், பயணங்களின் போது கண்களில் தூசு, பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கும் சன் கிளாஸ் அணிகிறார்கள். சன் கிளாஸில் UVR400 என்று அச்சிட்டிருப்பார்கள்.
இவ்வகை கிளாஸ்கள் அல்ட்ரா வயலட் கதிர்களை 400 மீட்டர் முன்பாகவே தடுத்து நிறுத்திவிடும் என்பதே இதன் பொருள். தரமான நிறுவனங்களின் மூலம் தயாராகும் கண்ணாடிகளில் மட்டும்தான்’யூவி புரொட்டெக்ஷன் லேயர்’ சரியாக பூசப்பட்டிருக்கும். மலிவுவிலை கண்ணாடிகளில் இந்த லேயர் இருக்காது. வெறுமனே UVR400 என போட்டிருப்பார்கள். இதனால் எந்தப் பயனும் இருக்காது.
மலிவு விலை கண்ணாடிகளை தொடர்ந்து அணிபவர்களுக்கு கண் வீக்கம், எரிச்சல், கண்களில் நீர் வழிதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். தரமற்ற உலோகம், மட்டரக பிளாஸ்டிக், போலியான சாயங்கள் கொண்டு இத்தகைய கண்ணாடிகள் தயாராவதால் ‘கான்டாக்ட் டெர்மடைடிஸ்’ போன்ற சரும நோய் ஏற்பட வாய்ப்புண்டு. கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் சருமம் சிலருக்கு சிவப்பாகவும் மாறும். ஒரு சிலருக்கு கருவளையங்களை உருவாக்கிவிடும்.
தரமான நிறுவனங்களில் தயாராகி தகுந்த உத்திரவாதத்துடன் விற்பனைக்கு வரும் சன் கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கண்களின் பாதுகாப்புக்கு அணியும் சன் கிளாஸ்களை வெறும் ஸ்டைலுக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடாது. போலி சன் கிளாஸ்களை அணிந்து ஆரோக்கியமாக இருக்கும் கண்களை கெடுத்துக் கொள்ளக்கூடாது.