சுற்றுச்சூழல் மாசுபாடு, கொளுத்தும் சூரியக்கதிர்கள், மன அழுத்தம் போன்றவற்றால் சரும செல்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி, சருமத்தின் நிறம் நாளுக்கு நாள் மாற்றமடைகிறது. இதனைத் தடுக்க வேண்டுமானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம்.
அதிலும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில எளிய பொருட்களைக் கொண்டே பராமரிப்பு கொடுத்தால் போதுமானது. அப்படி சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் ஓர் பொருள் தான் சோள மாவு. இந்த மாவைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
இங்கு சோள மாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து, கோடையில் உங்கள் சரும நிறத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஃபேஸ் பேக் 1
இந்த ஃபேஸ் பேக் போடுவதால் சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், சரும சுருக்கம் போன்றவை நீங்கி, சரும பொலிவு மேம்படும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சோள மாவுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால் எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியில் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் மாய்ஸ்சுரைசர் ஏதேனும் தடவ வேண்டும்.
ஃபேஸ் பேக் 2
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சூரியக்கதிர்களால் கருமையடைந்த சருமத்தின் நிறம் மாற்றமடையும். மேலும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையும் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும்.
ஃபேஸ் பேக் 3
சிறிது நன்கு கனிந்த வாழைப்பழம் மற்றும் பப்பாளியை ஒரு பௌலில் போட்டு கையால் நன்கு மென்மையாக மசித்து, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து, வறட்சியான சருமம் உள்ளவர்கள் ரோஸ் வாட்டரையும், எண்ணெய் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினையும் சிறிது சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இந்த கலவையை முகத்தில் தடவி 5-6 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, நீரில் நனைத்த காட்டன் கொண்டு முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனாலும் சரும கருமை அகலும்.
ஃபேஸ் பேக் 4
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 டீஸ்பூன் காபி தூள், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவையைக் கொண்டு முகத்தை 2 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பொலிவு பெறும்.
ஃபேஸ் பேக் 5
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், நிச்சயம் கோடையில் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்கலாம். அதற்கு ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு கலந்து, முகத்தை நீரில் கழுவிவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் 2-3 லேயர்களாகத் தடவி, நன்கு உலர்ந்ததும் மேல்புறமாக தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் இளமைத்தன்மையும், பொலிவும் மேம்படும்.