பிக் பாஸில் இருந்து விஜய் சேதுபதி விலகுவாரா? இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. விஜய் சேதுபதி நேற்று பேசிய பேச்சிலிருந்தே இது குறித்த உண்மை தெரியும்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 24 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
கடந்த ஏழு சீசன்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் வெளியேறியதை அடுத்து, விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 19) நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார், பிக் பாஸ் சீசன் 8 முடிவுக்கு வந்தது. முத்துக்குமரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர். நேற்று நடைபெற்ற இறுதி எபிசோடின் போது, விஜய் சேதுபதி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நுழைவதைக் காட்டும் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
வீடியோவின் இறுதியில் விஜய் சேதுபதி, “விளையாட்டு இன்னும் முடிவடையவில்லை…அடுத்த வருடம் சந்திப்போம்” என்றார். எனவே, அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.