தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும்.
தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம். ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த எண்ணெய். வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.
பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன் படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.