25.8 C
Chennai
Sunday, Nov 24, 2024
ld3832
கால்கள் பராமரிப்பு

வேனிட்டி பாக்ஸ் பெடிக்யூர்

ஒருவர் தனது கால்களை எந்த அளவு சுத்தமாக வைத்திருக்கிறார் என்பதை வைத்தே சுயசுத்தம் பேணுவதில் அவரது அக்கறையைத் தெரிந்து கொள்ளலாம். கால்களை கவனிப்பவர், கட்டாயம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நேசிக்கவும் மதிக்கவும் அவற்றின் ஆரோக்கியம் காக்கவும் தெரிந்தவராகவே இருப்பார்” என்கிறார் அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கால்களுக்கான அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சையான பெடிக்யூர் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் அவர். Pedi என்றால் பாதம்.பாதங்களுக்குச் செய்கிற பராமரிப்பைத்தான் பெடிக்யூர் (Pedicure) என்கிறோம். பெடிக்யூர் என்பது அழகுக்காக மட்டும் செய்யப்படுவதில்லை. கால்களில் கருமையோ, வெடிப்போ, சுருக்கங்களோ இல்லாமல் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்துக்கும் உதவக்கூடியது பெடிக்யூர். விதம் விதமான பெடிக்யூர் இருக்கின்றன.

ஒவ்வொரு வித பெடிக்யூருக்கும் ஒரு பிரச்னையை தீர்க்கும் தன்மை உண்டு. அதை அறிந்து செய்ய வேண்டும். அமெரிக்காவில் பெடிக்யூர் செய்ய மட்டுமே தனி ஸ்பா மையங்கள் இருக்கின்றன. அங்கே 25 வகையான பெடிக்யூருக்கும் மேல் செய்யப்படுகின்றன.பொதுவாக பெடிக்யூர் என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்று. அழகு சிகிச்சை என்று பார்த்தால் 20 வயதுக்கு மேல் தொடங்குவதுதான் சரியானது. சருமத்தின் இயற்கையான இளமைத் தன்மை மாறுவதற்குள் எந்த கெமிக்கல் சிகிச்சைகளையும் செய்யாமலிருப்பதே சிறந்தது.

20 வயதுக்குள் தேவையற்ற கெமிக்கல்களை உபயோகிக்கத் தொடங்கினால் கூந்தலுக்கும் சருமத்துக்கும் ஒருவித முதிர்ச்சியான தோற்றம் வந்துவிடும். இந்த விதிகளுக்கு அப்பாற்பட்டு குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் எடுத்துக் கொள்ளக்கூடிய சிகிச்சை என்றால் அது பெடிக்யூர் மட்டும்தான். பெடிக்யூர் செய்துவிடப் படுகிற குழந்தைகள் களைப்பின்றி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். பெடிக்யூர் செய்வதற்கு முன், அது எந்தக் காரணத்துக்காக தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு கால்களில் வெடிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். கடைகளில் ஸ்க்ரப்பர், பியூமிஸ் ஸ்டோன் மற்றும் எமரி போர்டு கிடைக்கும். இவையெல்லாம் அவசியம்.

பெடிக்யூர் செய்ய வெடிப்புகளை எடுக்க ஸ்க்ரப்பர், நகங்களை சுத்தப்படுத்த நெயில் புஷ்ஷர், நெயில் கட்டர், கியூட்டிகிள் கட்டர், நகங்களை மட்டும் சுத்தப்படுத்தும் டோ பிரஷ், மொத்த கால்களையும் சுத்தப்படுத்த ஃபுட் பிரஷ் ஆகிய எல்லாம் வேண்டும்.கெமிக்கல் கலந்த பெடிக்யூர் என்பது நாளடைவில் சருமத்தில் சுருக்கங்களை அதிகப்படுத்தும். கூடிய வரையில் இயற்கையான பொருட்களை வைத்து பெடிக்யூர் செய்வதே பாதுகாப்பானது. ஹைட்ரஜன் பெராக்சைடு மட்டும் விதிவிலக்கு. அதற்கு அழுக்கை எடுக்கக்கூடிய தன்மை உண்டு என்பதால் எந்த வகையான பெடிக்யூரிலும் இது அவசியப்படும்.

நக இடுக்குகளில் அழுக்கு புகுந்திருக்கும். அந்த அழுக்கை வெறுமனே சோப் போட்டுக் குளிப்பதன் மூலமோ, கால்களைக் கழுவுவதன் மூலமோ அகற்ற முடியாது. அழுக்கை அகற்றாமல் அப்படியே விட்டோமானால் அது நாளடைவில் நகங்களுக்கு ஒருவித ஃபங்கஸை கொண்டு வரும். நகங்களை சொத்தையாக்கி, நகங்களையே சாகடித்து விடும். அந்த ஆழமான அழுக்கு வெளியே வர வேண்டும் என்றால் ஹைட்ரஜன் பெராக்சைடு அவசியம்.

ட்ரிப்பிங் பாட்டில் எனப்படுவதில் ஹைட்ரஜன் பெராக்சைடு ஊற்றிக் கொள்ளலாம் அல்லது ஒரு பாட்டிலில் நிரப்பி, மூடியில் ஒரு சின்ன துளையைப் போட்டு விட்டு, நகங்களின் மேல் அந்த ஹைட்ரஜன் பெராக்சைடை ஊற்ற வேண்டும். அப்போது நக இடுக்குகளில் உள்ள அழுக்கெல்லாம் பொங்கி வெளியே வந்து விடும். பிறகு ஒரு பஞ்சை வைத்து, அதில் 2 சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டு நகங்களை துடைத்தால் அழுக்கெல்லாம் வந்து விடும். நகங்கள் சுத்தமாகி விடும். பாதங்களில் இறந்த செல்கள் இருக்கும்.

அவற்றை எக்ஸ்ஃபோலியேட் (Exfoliate) செய்து எடுத்துவிட்டு, பிறகுதான் பெடிக்யூர் செய்ய வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெயில் 1 டீஸ்பூன் சர்க்கரையும், 10 சொட்டு எலுமிச்சைச்சாறும், கால் டீஸ்பூன் டேபிள் சால்ட் ஆகிய எல்லாவற்றையும் கலந்து கைகளில் எடுத்து கால்களின் மேல் வட்ட வடிவமாகத் தேய்த்துக் கழுவவும். கால்களின் வறட்சி நீங்கி, மென்மையாகி இருப்பதைப் பார்ப்பீர்கள். பளபளப்பை உணர்வீர்கள். பிறகுதான் கால்களை ஊற வைக்க வேண்டும்.

ஒரு சுத்தமான பழைய பக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கால்கள் முக்கால் பாகம் அமிழ இருக்க வேண்டும். அந்தளவுக்கு கால்கள் பொறுக்கும் அளவு வெந்நீர் விட்டு, 2 கைப்பிடி கல் உப்பு சேர்க்கவும். மெக்னீசியம் சல்பேட் 1 கைப்பிடி போடவும். இது கால்களை மிருதுவாக்கி, பிரச்னைகளையும் சரியாக்கும். கால்கள் மிகவும் கருப்பாக இருந்தால் அதை ஒரு ஷேடு நிறம் மாற்றவும் இது உதவும். பூந்திக் கொட்டை தூள் ரீத்தா பவுடர் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். அதை 1 டீஸ்பூன் சேர்த்தால் நன்கு நுரைத்து வரும். கால்களில் உள்ள அழுக்கை வெளியே கொண்டு வர இது உதவும். கால்கள் ரொம்பவும் வறண்டு சொரசொரப்பாக இருப்பவர்கள் அதில் 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கரைசலில் கால்களை ஊற வைக்கவும்.

இந்தக் கரைசலில் 10 சொட்டு டீ ட்ரீ ஆயில், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு ரோஸ் ஆயில் மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஆறும் வரை கால்களை ஊற வைத்து எடுத்துக் கழுவவும். அடுத்தது கால்களுக்கான மசாஜ். முகத்துக்கு உபயோகிக்கிற மசாஜ் க்ரீமை கைகள் மற்றும் கால்களுக்கான மசாஜுக்கு பயன்படுத்தக்கூடாது. முகத்துடன் ஒப்பிடும் போது, கைகள் மற்றும் கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் அங்கே வறட்சி அதிகமிருக்கும். எனவே, டீப் மாயிச்சரைசிங் க்ரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். அதனால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். சருமமும் மென்மையாகும். பிறகு கால்களைக் கழுவி, சுத்தமாகத் துடைத்துவிட்டாலே போதும்.

உங்கள் கவனத்துக்கு…

பல இடங்களிலும் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூருக்கு அமோனியா உபயோகிப்பதைப் பார்க்கலாம். மெனிக்யூருக்கு அது தேவையில்லை. லிக்யூட் அமோனியா நமது சருமத்தை வறண்டு போகச் செய்வதுடன், சுருக்கங்கள் ஏற்படவும்
காரணமாகி விடும்.

மெனிக்யூர் மற்றும் பெடிக்யூருக்கான கியூட்டிகிள் க்ரீம் எந்த நிறுவனத் தயாரிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அதை உபயோகிக்கும் போது 10 துளிகள் கிளிசரினும், 3 துளிகள் ஃபிரான்கின்சென்ஸ் (Frankinsense) மற்றும் 3 துளிகள் யிலாங்யிலாங் (Ylangylang) ஆகிய அரோமா ஆயில்களை கலந்து சிகிச்சை கொடுப்பது சிறப்பான பலனைத் தரும்.

கை, கால்களில் உள்ள இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் அவசியம். முகத்துக்கு உபயோகிக்கிற ஸ்க்ரப்பை இதற்குப் பயன்படுத்தக்கூடாது. முகத்தின் சருமம் மிக மிக மென்மையானது. பொத்தாம் பொதுவாக முகத்துக்கும், மெனிக்யூர், பெடிக்யூருக்கும் ஒரே ஸ்க்ரப்பை வாங்கிப் பயன்படுத்துவது கூடாது. முகத்துக்கு உபயோகிக்கிற ஸ்க்ரப்பில் துகள்கள் பெரிதாக, அதிகமாக இருந்தால் முகத்தில் நுண்ணிய கீறல்கள் விழ வாய்ப்புண்டு. அதுவே கைகள் மற்றும் கால்களுக்கு உபயோகிக்கிற ஸ்க்ரப், அந்தச் சருமத்தின் கடினத் தன்மையைப் போக்கி, மிருதுவாக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, மசாஜ் க்ரீம், ஸ்க்ரப் போன்றவற்றை அழகு சிகிச்சைகளின் தன்மைக்கேற்பவே தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.ld3832

Related posts

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

nathan

நோய்களின் அறிகுறியான கால் வீக்கம்!

nathan

அழகான பாதங்கள் பெறுவது எப்படி?

nathan

வீட்டில் உள்ள சில எளிய பொருள்களை வைத்து பாதத்தில் உள்ள கருமையை நீக்க சில வழிமுறைகள் இங்கே…

nathan

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

nathan

பாத வெடிப்பை மறைய வைக்கும் குறிப்புகள்

nathan

கால்களுக்கான பராமரிப்பு!

nathan

வெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள் சூப்பர் டிப்ஸ்….

nathan

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika