இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி.
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் தோராயமாக 33 கோடி ரூபாய்க்கு சமம். அதேபோல், இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 16 கோடி) வழங்கப்பட்டது.
அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 6.50 கோடி பரிசுத் தொகையும், லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூ. 83 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். அவர் 11 ஆட்டங்களில் விளையாடி 765 புள்ளிகளைக் குவித்துள்ளார்.