வழவழ வெண்டைக்காய்க்கு யார் லேடீஸ் பிங்கர் என்று பெயர் வைத்தார்கள். அவர்கள் இன்று இருந்திருந்தால் பெண்களின் நகங்களுக்கு கோடி நிலாக்கள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள். அந்த கோடி நிலாக்களின் முகங்களிலும் வானவில்களை படரவிட்டால் எப்படியிருக்கும்! ஆஹா அதான் நெயில் ஆர்ட். எப்படி வரைந்தார்கள் என்று கற்பனை பண்ண முடியாத அளவுக்கு, ஸ்பெஷல் தோற்றங்களால் வியக்கவைக்கிறது.
மருதாணியையும் கோன் வடிவத்துக்கு மாற்றி வரைந்து தள்ளினாலும் நெயில் ஆர்ட் ரொம்பவே ஸ்பெஷல். நெயில் பாலீஷ், நெயில் வார்னிஷ், கிளிட்டர், வெல் வெட் பவுடர் ஆகியவற்றை உடைகளின் வண்ணங்களுக்கும், தன்மைக்கும் ஏற்ப பயன்படுத்தி டீன்கள் விரல்களில் வானவில்களை மிளிர வைக்கின்றனர். இன்றைய பெண்கள் பார்ட்டி, திருமண விழாக்கள், ஹாலிடே ஷாப்பிங் என சூழலுக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டில் பின்னியெடுக்கின்றனர்.
நெயில் ஆர்ட்டுக்காக ரூ.20 முதல் ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். இதில் ஸ்டாம்பிங், ஸ்பாஞ்சிங், டாட்டிங், டேட்டிங் என பல வகையில் நெயில் ஆர்ட்டில் கலந்து கட்டி கலாய்க்கின்றனர். நெயில் ஆர்ட்டை பார்த்து புரிந்து கொள்ள முயற்சிப் பவர்களுக்குத் தான் மூளையும் வியர்க்கும். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே, வாட்டர் மார்பிள் நெயில் ஆர்ட் பண்ண முடியும். முதலில் நகங்களை சுத்தம் செய்து பேஸ்கோட் அடித்துக் கொள்ளவேண்டும்.
ஒரு பவுலில் வெது வெதுப்பான தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் தேவையான வண்ணங்களில் நெயில் பாலீஸ் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். குறைந்த பட்சம் 8 வண்ணங்கள் வரை ஊற்றிக் கொள்ளலாம். பின்னர் நகங்களுக்கு கீழே ஒவ்வொரு விரலிலும் செல்லோடேப் ஒட்டிக் கொள்ளவும். பின் ஒவ்வொரு நகமாக தண்ணீரில் விட்டு எடுக்க வேண்டும். அதன் பின்னர் செல்லோடேப்பை விரல்களில் இருந்து அகற்றி விடலாம். இப்போ மல்டி கலர் நெயில் ஆர்ட்ரெடி. என்ஜாய் கேர்ள்ஸ்!