நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைக் கூட கலர் கலராக மாற்றிக் கொள்வதே ஃபேஷன் என்றாகிவிட்டது.
இன்றைய காலகட்டத்தில் 10 வயதுப் பிள்ளைகளுக்குக் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நரை எட்டிப் பார்ப்பதும் சகஜமாகி விட்டது.
நரையை எப்படித் தவிர்ப்பது என்பதைவிட, அதை எப்படி மறைப்பது என்பதுதான் எல்லோரின் கவலையும். அரைகுறை விழிப்புணர்வின் காரணமாக, சமீபகாலமாக அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்ட ஹேர் டைதான் சிறந்தது என நினைத்து அதைத் தேடி வாங்கி உபயோகிக்கிறார்கள் மக்கள்.
ஹேர் கலர்களில் உள்ள அமோனியா மட்டும் ஆபத்தானதல்ல.. அதைவிட பயங்கரமான சோடியம் கார்பனேட் ஹைட்ரஜன் பெராக்சைடு, பெட்ரோலியம் ஜெல்லி, மெதைல் பினால், நெஃப்தால் போன்ற ரசாயனங்களும் அவற்றில் உள்ளன.
இவற்றை உபயோகிப்பதால் ரத்தபுற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய், தோல் எரிச்சல், ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் உங்கள் கூந்தல் மற்றும் மண்டைப் பகுதியின் தன்மைக்கேற்ற சரியான ஹேர் கலரிங்கை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஹெர்பல் டை அல்லது ஹேர் கலர் என்கிற விளம்பரத்துடன் விற்பனையாகிற அனைத்தும் முழுக்க முழுக்க மூலிகைகள் கலப்பால் தயாரிக்கப்பட்டவை அல்ல, அவற்றிலும் ஆபத்தான கெமிக்கல்களின் கலப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.