ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சமீப காலமாக ஆண்களும் தங்களின் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதனால் அவர்களின் மனதில் அழகு பராமரிப்பு குறித்து ஒருசில பொதுவான கேள்விகள் எழும்.
அப்படி எழும் கேள்விகளுக்கான சரியான பதில்கள் அவர்கள் கிடைக்காமல் இருப்பார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்காக, அவர்களின் மனதில் எழும் அழகு பராமரிப்பு குறித்த பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும்?
தற்போது மாசுக்கள் அதிகம் சூழ்ந்திருப்பதால், தினமும் தலைக்கு குளிப்பதே சிறந்தது. இல்லாவிட்டால், தூசிகள் ஸ்கால்ப்பில் படிந்து, பொடுகு வளர ஆரம்பித்து, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும். எனவே தினமும் கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்புக்களைப் பயன்படுத்தாமல், மைல்டு ஷாம்புக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. மேலும் தலைக்கு குளித்து முடித்த பின்னர் டவல் பயன்படுத்தி தேய்த்து துடைக்காமல், கையால் அப்படியே இயற்கையாக உலர வைக்க வேண்டும். மேலும் முடிந்த வரையில் சீப்புக்களைப் பயன்படுத்துவது தவிர்த்து, விரல்களால் தலையை சீவிக் கொள்வது சிறந்தது.
ஏன் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்?
ஆண்கள் வெளியே அதிகம் சுற்றுவதால், சருமம் எளிதில் வறட்சியடையக்கூடும். இப்படி சருமத்தில் வறட்சி அதிகமானால், அது பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொண்டால், சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, சருமத்தின் pH அளவும் சீராக இருக்கும்.
ஃபேஸ் ஸ்கரப் என்றால் என்ன?
எதற்கு பயன்படுத்த வேண்டும்? ஃபேஸ் ஸ்கரப் என்பது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், வறட்சியடைந்த செல்களை தேய்த்து வெளியேற்றும் ஓர் முறை. பெண்களை விட ஆண்களுக்கு இம்முறையில் மிகவும் உபயோகமானது. ஏனெனில் பெண்களை விட ஆண்களின் சருமம் சற்று கடினமானது. எனவே ஆண்கள் ஸ்கரப் செய்வதன் மூலம் அவர்களின் சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் தூசிகள் அனைத்தும் வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும். எனவே வாரத்திற்கு 2 முறை ஸ்கரப் செய்யுங்கள்.
சருமத்திற்கு ஏற்ற சரியான அழகு சாதன பொருளை எப்படி தேர்ந்தெடுப்பது?
இது ஒவ்வொருவரின் மனதிலும் எழும் ஓர் கேள்வி தான். இதற்கு முதலில் உங்களுக்கு தெரிந்த பெண்ணிடம் தான் கேட்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு தான் எது சிறந்த அழகு சாதன பொருள் என்று தெரியும். பின் உங்களுக்கு எந்த வகையான சருமம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து கொண்டாலேயே, அழகு சாதனப் பொருட்களால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
முகத்தை சரியான வழியில் கழுவுவது எப்படி?
பலரும் முகத்தைக் கழுவுவது சாதாரணமான ஒன்றாக நினைக்கின்றனர். மேலும் முகத்தில் உள்ள அழுக்கு நீங்க சோப்புக்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்புக்களை முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தினால், சருமம் தன் ஆரோக்கியத்தை இழக்கும். எனவே எப்போது முகத்தைக் கழுவும் போதும் மைல்டு ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டும். அதிலும் உங்களுக்கு பருக்கள் இருந்தால், சாலிசிலிக் ஆசிட் உள்ள ஃபேஸ் வாஷ்ஷைப் பயன்படுத்துங்கள்.
ஷேவிங்கிற்கு பின் ஏற்படும் அரிப்புக்கள், எரிச்சல்கள் மற்றும் காயங்களைத் தடுப்பது எப்படி?
சில ஆண்களுக்கு ஷேவிங் செய்த பின் அரிப்புக்கள், எரிச்சல்கள் மற்றும் சிலருக்கு காயங்கள் கூட ஏற்படும். இப்படி நீங்களும் அனுபவிப்பவராயின், ஷேவிங் செய்யும் முன் ஷேவிங் ஆயில் தடவி, பின் ஜெல் வகையைச் சேர்ந்த ஷேவிங் க்ரீம் பயன்படுத்தி ஷேவிங் செய்து, பின் ஆஃப்டர் ஷேவ் லோசன் பயன்படுத்தி, சிறிது நேரம் கழித்து மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். அதுமட்டுமின்றி, ஷேவிங் செய்யும் போது முடி வளரும் திசையில், போதிய அழுத்தத்துடன் ஷேவிங் செய்ய வேண்டும்.
தாடி வளராத பகுதியில் எப்படி தாடியை வளரச் செய்வது?
சில ஆண்களுக்கு முகத்தின் சில பகுதிகளில் தாடி வளராமல் இருக்கும். அத்தகையவர்கள், ஸ்கரப் பயன்படுத்தி அப்பகுதியில் மென்மையாக தேய்த்தால், முடி வளர்ச்சிக்கு தடையாக இருந்த இறந்த செல்கள் நீக்கப்பட்டு, நாளடைவில் அப்பகுதியில் முடி வளர ஆரம்பிக்கும்.
முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி?
தற்போதைய ஆண்களுக்கு முடி அதிகம் கொட்டி, ஆங்காங்கு வழுக்கை தெரிய ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம், அவர்கள் தலைக்கு நல்ல நறுமணம் உள்ளது என்று கெமிக்கல் அதிகம் உள்ள ஷாம்புக்களைப் பயன்படுத்துவதோடு, சூடான நீரில் தினமும் முடியை அலசுவது தான். இப்படி சுடுநீரில் முடியை அலசினால் மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். எனவே எப்போதும் தலைக்கு குளிர்ந்த நீர் அல்லது மிகவும் வெதுவெதுப்பான நீரில் மட்டுமே முடியை அலச வேண்டும். மேலும் முடியை துண்டு பயன்படுத்தி தேய்க்கக்கூடாது.