தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். `முடி கொட்டிவிடுமோ’ என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும். தலை முடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும்.
தலையில் வகிடு(உச்சி) எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடியின் வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தேவையற்ற டென்ஷன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.
தினம் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வெந்தயக்கீரை நல்லது. துவையலாகவோ அல்லது சாம்பார், ரசம் இவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம்.
இதே கீரையை ஒரு கப் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதைத் தலையில் தேய்த்துச் சீயக்காய்ப் போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி, முடி வளர ஆரம்பிக்கும். அசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வர ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சினைளை வெந்தயக்கீரையை சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும்.
ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முடி நன்றாக வளரத்துவங்கும். சிலருக்கு வெந்தயக்கீரை என்றாலே பிடிக்காது. அவர்கள், உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிடலாம். டீன் – ஏஜில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தலையில் அதிகமாக எண்ணெய் சுரந்து, அடிக்கடி வியர்த்து வழியும். இதனால் தலையில் பிசுக்கு ஏற்பட்டு முடி வளர்வது தடைபடும்.
வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக வெட்டிவேர் தண்ணீரை தலைக்கு விட்டுக் கொள்ளலாம். (முதல் நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் வெட்டிவேரை துண்டாக்கி போட்டு வைத்து, காலையில் பயன்படுத்தலாம்). தலையும் சுத்தமாகி, கூந்தலும் நறுமணம் வீசுவதோடு, வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
`உடம்பைக் குறைக்கிறேன்’ என்று சிலர் சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அத்தகையோருக்கும் முடி கொத்துக் கொத்தாக உதிர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை ஆம்லெட்டுக்கு தயாரிப்பது போல நன்றாக அடித்து, அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, சீயக்காயுடன் கலந்து தலையில் தேயுங்கள்.
15 நிமிடம் கழித்துக் குளியுங்கள். முடி பளபளப்பாவதோடு, கொட்டிய இடத்தில் முடி நன்றாக வளரும். முடியை சுருள்சுருளாகச் (பெர்மிங்) செய்து கொள்வதில் சிலருக்கு ஈடுபாடு இருக்கும்.
இப்படிச் செய்யும் போது, முடியின் வேர்ப்பகுதியும் சேர்த்து சுருட்டப்படுவதால், மண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு அதிகமாக முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, முடியை சுருள் செய்வதை முடிந்த வரைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், கூந்தலின் பின்பகுதியில் மட்டும் செய்து கொள்ளுங்கள்.