தென்னிந்தியாவில் பருப்பு மிகவும் பிரபலமானது. அதிலும் பருப்பை கடைந்து, சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிடுவது வழக்கம். அதே சமயம் பருப்புக்களுடன் காய்கறிகள் அல்லது கீரைகளை சேர்த்து சமைக்கவும் செய்வார்கள். அப்படி பாசிப்பருப்புடன் பசலைக்கீரையை சேர்த்து சமைத்து சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இங்கு அந்த பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இன்று செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப்
பசலைக்கீரை – 3 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 4-5 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 3/4 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் பாசிப்பருப்பை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, குக்கரை மூடி, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின் விசில் போனதும் குக்கரை திறந்து, மத்து கொண்டு கடைந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பசலைக்கீரை, தேங்காய் பால் மற்றும் கரம் மசாலா சேர்த்து வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கீரையை நன்கு வேக வைக்க வேண்டும்.
கீரை நன்கு மென்மையாக வெந்ததும், குக்கரை இறக்கி சாதத்துடன் பரிமாறினால், பாசிப்பருப்பு பசலைக்கீரை கடைசல் ரெடி!!!