வெயில் வேறு சக்கை போடு போடுகிறது. அதனால் தினமும் கட்டாயம் பழங்களையும் ஜூஸ்களையும் குடித்து வெப்பத்தை தணித்துக் கொண்டிருப்போம். அதிலும் குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் தர்பூசணியை விரும்பிச் சாப்பிடுவார்கள். சில பழங்கள் மிகவும் சிவப்பாக, இனிப்பாக இருக்கும். சில பழங்கள் உள்ளே லேசான சிவப்புடன் அவ்வளவு சுவையாக இருக்காது. வீட்டுக்கு வாங்கி வந்து வெட்டிப் பார்த்தபின் தான் கடைக்காரரை திட்டிக் கொண்டிருப்போம்.
தர்பூசணியில் இரண்டு வகை
தர்பூசணி பழத்தில் ஆண், பெண் எப்படி இருக்கும். என்ன காமெடியா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் உண்மையிலேயே தர்பூசணியில் ஆண் பழம், பெண் பழம் இரண்டும் உண்டு. அந்த இரண்டில் பெண் தர்பூசணி தான் ஆண் பழத்தை விட இனிப்பும் நிறமும் அதிகமாகக் கொண்டிருக்கும். அதை எப்படி கண்டுபிடிப்பது என்றும் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே போதும். இந்த கோடைகாலம் முழுக்க நல்ல தர்பூசணியை சுவைக்க முடியும்.
ஆண், பெண் அடையாளம்
தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். அதில் நாம் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது பெரிய சைஸில் நீளமாக உள்ள பழங்களைத்தான். அப்படி நீளவாக்கில் உள்ளது தான் ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் உள்ளது தான் பெண் தர்பூசணி. நாம் பொதுவாக தேர்ந்தெடுக்கும் நீள பழங்கள் சற்று சுவை குறைவானது தான். பெண் பழம் தான் சுவை அதிகமாக இருக்கும்.
தேர்வு செய்யும் முறை
நீள வாக்கில் உள்ள பழங்களை விட வட்டமான உருண்டை வடிவில் உள்ள பழங்களை தேர்வு செய்யுங்கள். அதில் சுவை அதிகம். நீளவாக்கில் உள்ளதைவிட உருண்டை பழங்களில் விதைகளும் சதைப்பற்றும் அதிகமாக இருக்கும். நல்ல சிவப்பு நிறமாகவும் இருக்கும். அதனால் அதையே தேர்ந்தெடுங்கள். நீளவாக்கில் உள்ள பழத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும்.
தோல் தடிமன்
நீளவாக்கில் உள்ள பழத்தில் தோல் பகுதி நல்ல தடிமனாக இருக்கும். பழத்தின் அளவு குறைவாக இருக்கும். ஆனால் உருண்டையான பழங்களில் தோல் தடிமன் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
காம்புப்பகுதி
தர்பூசணி வாங்கும்போது இருக்கிற மிகப்பெரிய குழப்பமே எது நன்றாகப் பழுத்தது என்று கண்டுபிடிக்கத் தெரியாமல் காயை வாங்கி வந்துவிட்டு, வீட்டில் நன்றாக வசை வாங்குவோம். ஆனால் காம்புப்பகுதியைப் பார்த்தே நன்கு பழுத்த பழத்தைக் கண்டுபிடித்துவிடலாம். நன்கு புதிதாக பச்சையாக உள்ள காம்பு கொண்ட பழங்களை வாங்குவதைவிட, பழம் பச்சையாகவும் காம்பு மட்டும் நன்கு காய்ந்து போய் இருக்கும் பழமாகத் தேர்வு செய்யுங்கள். அதுதான் நன்றாகப் பழுத்த பழம்.
அளவு
தர்பூசணியைப் பொறுத்தவரை சிறிய பழத்தில் சுவை இருக்காது என்று தூக்க முடியாத அளவுக்கு பெரிய பழமாகப் பார்த்து வாங்குவோம். ஆனால் உண்மையிலேயே பெரிய சைஸ் பழங்களைவிட சிறிய சைஸ் பழங்கள்தான் சுவை அதிகமாக இருக்கும்.
தோள்நிறம்
தர்பூசணி கொடியில் இருந்து கீழே மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் தோள் பகுதி மட்டும் வெளுத்து காணப்படும். அதில் லேசான வெண்மை மற்றும் வெளிர் மஞசள் நிறத்திலும் இருக்கும். அதேபோல் அடர் மஞ்சள் மற்றும் லேசான பிரௌன் நிறத்திலும் இருக்கும். பெரும்பாலும் அப்படி இருக்கும் பழத்தை வாங்க மாட்டோம். அதிலும் அடர் மஞ்சள் மற்றும் பிரௌன் நிற பழங்களை எடுக்கவே மாட்டோம். ஆனால் வெளிர் மஞ்சள் மற்றும் வெண்மை நிறம் உள்ளவை ஓரளவுக்குதான் பழுத்திருக்கும். அடர் மஞ்சள் மற்றும் பிரௌன் நிறத்தில் உள்ளவைதான் நன்கு பழுத்திருக்கும்.
பலன்கள்
சிறுநீரகக் கற்களை கரைக்கும். கல்லீரலை சுத்தப்படுத்தும். பித்தத்தைப் போக்கும்,
சிறுநீர் எரிச்லை போக்கும், நாக்கு வறட்சியை உடனே போக்கும், இயற்கையான குளுக்கோஸ் இதில் அதிகம். இதயத்தை பலப்படுத்தும். எலும்பு மற்றும் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் உண்டாகும். சருமப் பொலிவுக்கும் தலைமுடி பொலிவுக்கும் நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் சாப்பிடலாம்.
என்ன!
என்ன! இன்னைக்கு வீட்டுக்குப் போகும் சின்னதா, உருண்டையா பாதி தோள் மஞ்சளா பெண் தர்பூசணியா பார்த்து கரெக்டா வாங்கிட்டுப் போவீங்களா… அப்புறம் பாருங்க… வீட்ல உங்களுக்கு ஒரே பாராட்டு மழை தான்.