இதுவரை அவரைக்காய் பொரியல் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையா? அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அவரைக்காய் சாம்பாரை செய்து சுவைத்துப் பாருங்கள். இது முருங்கைக்காய் சாம்பாருக்கு சிறந்த மாற்றாக விளங்கும்.
சரி, இப்போது அந்த அவரைக்காய் சாம்பாரின் செய்முறையைப் பார்ப்போமா!!!
அவரைக்காய் – 15 (நறுக்கியது)
துவரம் பருப்பு – 3/4 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கி, பின் அவரைக்காயை போட்டு 4-5 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அவரைக்காய் வெந்ததும், அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, உப்பு சுவை பார்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், அவரைக்காய் சாம்பார் ரெடி!!!