டீன் ஏஜில் மட்டும்தான், விருப்பங்கள் அனைத்தையும் முயற்சி செய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமான லும் அணியலாம். காரணம், அவர்கள் எதைச் செய்தாலும் அது அழகு. ஃபேஷன்! இன்றைய இளம் தலைமுறையினர் பெரிய பெரிய கலர் ஃபுல் வளையங்கள், பெரிய ஜிமிக்கிகள் அணிவதை விரும்புகின்றனர்.
கல்லூரிப் பெண்களின் விருப்ப நகைகளில் ஜங்க் ஜுவல்லரி (பெரிதாக, கன்னாபின்னா கலர்களில், அளவுகளில், டிசைன்கள்), ஆன்ட்டிக் ஜுவல்லரி (பழங்காலத்து தோற்றம் கொண்டவை), ஆக்சிடைஸ்டு ஜுவல்லரி (லேசாக கருத்துப்போன வெள்ளியின் தோற்றம் கொண்டது), பிளாக் மெட்டல் மற்றும் ஒயிட் மெட்டல் ஜுவல்லரி என எல்லாம் உண்டு.
சில பெண்கள் காதணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்துவார்கள். குழந்தைகளைப் போலவே கல்லூரிப் பெண்களுக்கும் பொம்மைகள் மீது மோகம் உண்டு. டெடி பியர் வைத்து விளையாடுவதிலிருந்து, பொம்மை உருவம் பதித்த பொருட்களை உபயோகிப்பது வரை எல்லாம் அதன் பிரதி பலிப்புகளே. காதணிகளும் விதிவிலக்கல்ல.
இது தவிர, ஒற்றைக் கல் வைத்தது, பூ உருவம் கொண்டது, பட்டாம் பூச்சி, இதயம், டயமண்ட், சிலுவை, மீன், எலும்புக்கூடு, செருப்பு என விருப்பமான உருவங்கள் தாங்கிய காதணிகளை அதிகம் அணிகிறார்கள். ‘ஃபெதர் ஜுவல்லரி’ எனப்படுகிற இறகு வைத்த நகைகள் டீன் ஏஜ் மற்றும் கல்லூரிப் பெண்கள் மத்தியில் ரொம்பவே ஹாட். அதில் மயிலிறகு தான் நம்பர் 1. வேறு வேறு கலர்களில் கிடைப்பதால் மற்ற இறகுகள் வைத்த நகைகளுக்கும் டிமாண்ட் அதிகம்.