உடுமலைபேட்டை கவுசல்யா தனது இரண்டாவது கணவர் சக்தியை பிரிவதாக பதிவிட்ட பேஸ்புக் பதிவை ஒரு மணி நேரத்தில் நீக்கிய நிலையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அப்போது வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், கவுசல்யா தந்தை சின்னச்சாமி குற்றம் இழைத்ததற்கான போதிய ஆவணங்களை காவல்துறையினர் தாக்கல் செய்யவில்லை என்று அவரை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.
மேலும், 5 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில், சங்கரை இழந்த ஓரிரு வருடத்தில் சக்தி என்ற இளைஞருடன் கவுசல்யா காதல் வயப்பட்டார். அந்த சக்தி என்ற இளைஞர் பெண்கள் விவகாரத்தில் மோசமானவர் என்ற சர்ச்சை எழுந்தது.
இருப்பினும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி சக்தியை திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில், நானும் சக்தியும் பிரிகிறோம். ஓராண்டாக மனதளவில் என்னை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது. விவாகரத்துக்கு திங்கள் விண்ணப்பிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்தில் அந்தப் பதிவை அவர் நீக்கியுள்ளார்.