சரியான சரும பராமரிப்பு மற்றும் வாழ்வியல் பழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவர் மிக எளிதாக வயது முதிர்வுக்கான அறிகுறிகளை தாமதப்படுத்த முடியும். நாம் வெளியில் அடி எடுத்து வைக்கும் போது சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்கிறது, மேலும் வெளிப்புறத்தில் இருக்கும் மாசு, தூசு போன்றவைகள் இளமையிலேயே வயது முதிர்விற்கான அறிகுறிகளை உண்டாக்குகின்றன.
மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மூலமாக நாம் எளிய முறையில் சரும அணுக்களை சேதப்படுத்த முடியும். உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விதிகளை பின்பற்றலாம்.
உங்கள் சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்திடுங்கள்
சூரிய ஒளியில் இருக்கும் புறஊதா கதிர்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தி சரும நிறமிழப்பு, திட்டுக்கள், சுருக்கம் போன்ற வயது முதிர்விற்கான அறிகுறிகளை இளம் வயதிலேயே உண்டாக்கக்கூடும். இதனைத் தடுக்க, 30 SPF-க்கு அதிகமாக உள்ள சன்ஸ்க்ரீன் லோஷனை சருமத்தில் தடவிய பின்பு வெளியில் செல்வது நல்லது. வீட்டில் இருக்கும் போதும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வைட்டமின் ஈ மற்றும் சி சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ளலாம்
இந்த வைட்டமின்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகளின் ஆதாரமாக உள்ளன. இவை சருமத்திற்கு தீங்கு உண்டாக்கும் கூறுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. சருமத்தின் எலாஸ்டிக் தன்மை மற்றும் மென்மையை மேம்படுத்துகின்றன. நட்ஸ், பால் பொருட்கள், விதைகள், தாவர எண்ணெய், இலையுடைய பச்சைக் காய்கறிகள், புளிப்பு பழங்கள், கிவி, எலுமிச்சை போன்ற பழங்களில் இந்த வைட்டமின் சத்து அதிகம் உள்ளது.
மன அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது உங்கள் சருமம் மற்றும் கூந்தலை நேரடியாக பாதிக்கிறது. உங்கள் புலன்களை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்களை அவ்வப்போது ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளில் அடிக்கடி ஈடுபடுங்கள். வரைவது, பாடுவது, சமைப்பது, ஒட்டப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவைற்றை செய்வதால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
எப்போதும் உங்கள் மேக்கப்பை நீக்கிவிட்டு உறங்குங்கள்
மேக்கப்பை கலைக்காமல் உறங்கச் செல்வதால் உங்கள் சருமத்தின் துளைகள் அடைக்கப்படலாம் . இதனால் முகத்தில் சுருக்கங்கள் உண்டாகலாம். இரவு உறங்கச் செல்வதற்கு முன் கட்டாயம் உங்கள் முகத்தில் போடப்பட்டிருக்கும் மேக்கப்பை நீக்கிவிடுங்கள். இதனால் உங்கள் சருமம் எளிதில் சுவாசிக்க முடியும் மற்றும் அழுக்குகள் உங்கள் சருமத்தில் அடைக்காமல் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள்
குளித்து முடித்து வந்தவுடன் உங்கள் முகத்திற்கு மாய்ஸ்ச்சரைசர் தடவுங்கள். கிளிசரின், ஹயலூரோனிக் அமிலம் போன்ற மூலப்பொருட்கள் உள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.
நீங்கள் நீர்ச்சத்துடன் இருங்கள்
தினமும் குறைந்தது 8 டம்ளர் அளவு தண்ணீர் பருகுங்கள். இதனால் உங்கள் சருமம் நீர்ச்சத்துடன் இருக்கும். உங்கள் சருமத்தின் மென்மை மற்றும் இதமான உணர்வு குறையாமல் இருக்கும். நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சருமத்தில் முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் விரைவாக உண்டாகலாம்.