கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருப்பதால், கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். ஆனால் பிரசவத்திற்கு பின் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால், கூந்தல் உதிர்தல் அதிகம் ஏற்படும். பிரசவத்திற்கு பின் சந்திக்கும் பிரச்சனைகளிலேயே இது தான் மிகவும் கொடுமையானது.
ஏனெனில் குழந்தை பிறந்த பின், குழந்தையை கவனிப்பதிலேயே நேரம் போய்விடும். இதனால் கூந்தலை சரியாக கவனிக்க முடியாமல் போய், கூந்தலும் மெதுவாக குறைய ஆரம்பித்துவிடும். பின் கூந்தல் தலையில் இல்லாத நேரம், அதனைப் பராமரித்து என்ன பயன்? இந்த நிலைமையைத் தவிர்க்க, பிரசவத்திற்கு பின் ஒருசிலவற்றை பின்பற்றி வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். முக்கியமாக பிரசவம் முடிந்து அனைவருக்குமே கூந்தல் உதிர்தல் அதிகம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
இப்போது பிரசவத்திற்கு பின் கூந்தல் உதிர்த்தல் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.
அளவுக்கு அதிகமாக உதிர்கிறது எப்படி தெரிந்து கொள்வது?
ஆரோக்கியமாக இருக்கும் போது, எப்படி இருந்தாலும் கூந்தல் உதிரும். ஆனால், பிரசவத்திற்கு பின்னும் அதே அளவில் கொட்டினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே அதிகமானால், அப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரோக்கியமான டயட்
பிரசவத்திற்கு பின் உடலில் சத்துக்கள் குறைவாக இருப்பதாலும், மயிர்கால்களின் வலிமைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், முடி உதிர ஆரம்பிக்கும். எனவே பிரசவத்திற்கு பின் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிரசவத்திற்கு முந்தைய வைட்டமின்கள்
பிரசவத்திற்கு முன் பெண்கள் வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் அதனை பிரசவத்திற்கு பின் நிறுத்திவிடுவார்கள். இருப்பினும், பிரசவத்திற்கு பின்னும் அந்த வைட்டமின் மாத்திரைகளை சில மாதங்கள் எடுத்து வந்தால், கூந்தல் உதிர்தலை ஓரளவு தடுக்கலாம்.
ரிலாக்ஸ்
பிரசவத்திற்கு பின் பெண்கள் ஓரளவு மன அழுத்தத்துடன் இருப்பார்கள். மன அழுத்தம் இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். ஆகவே பிரசவத்திற்கு பின் யோகா, தியானம் போன்றவற்றை செய்து ரிலாக்ஸாக இருக்க வேண்டும். இதனாலும் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.
தண்ணீர் குடிக்கவும்
பிரசவத்திற்கு பின் போதிய அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் 8 டம்ளர் தண்ணீரை தவறாமல் குடித்து வரவேண்டும். இதனால் கூந்தல் உதிர்தல் குறைவதோடு, தாய்ப்பால் சுரப்பும் அதிகரிக்கும்.
இயற்கை வைத்தியங்கள்
கூந்தல் உதிர்கிறது என்று கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தாமல், இயற்கைப் பொருட்களான தயிர், முட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி கூந்தலைப் பராமரித்தால், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
எண்ணெய் மசாஜ்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் தலையில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வாரம் ஒரு முறை தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளித்து வந்தால், தலையில் எவ்வித பிரச்சனைகளும் வராமல் தடுக்கலாம்.