இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்னையே, தலையில் மையம் கொள்ளும் பொடுகு தான். தலையில் உருவாகும் ஒருவித நுண் கிருமிகளால் பொடுகு உருவாகிறது. மேலும், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடும், பொடுகு வர காரணமாகிறது. பொடுகு தொல்லையால், வெளியில் எந்த இடத்துக்கு போக முடியாத நிலை ஏற்படும். ரசாயனம் கலந்த உபகரணங்களை பயன்படுத்தினால், தலை முடிதான் பாதிக்கப்படும்.
பொடுகை போக்க ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் தவிர்க்கலாம் என்கின்றனர், அழகு கலை நிபுணர்கள்.
பொடுகை போக்க சில டிப்ஸ்:
பாசிப்பயறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும். கற்றாழை சாற்றை, தலையில் தேய்த்து, ஊறவைத்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் பலன் கிடைக்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து, சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்கலாம். பூச்சித் தாக்குதலால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே, வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை அரைத்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால், தொல்லை போகும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பலாம்.
நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால், பொடுகு அண்டாது. தேங்காய் பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பயன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிஷம் கழித்து குளித்து வரலாம். பாலுடன், மிளகு பவுடரை சேர்த்து, தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிக்கலாம்.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பிரச்னை இருக்காது. அருகம்புல் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து தினசரி தேய்க்க வேண்டும்.
வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தும் தேய்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வரலாம். நெல்லி முள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி, ஒரு மணிநேரம் ஊறிய பின் குளித்தால், சிறப்பான பயன் கிடைக்கும்.