200 மி.லி. தண்ணீரைக் கொதிக்கவைக்கவும். அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து அணைத்து மூடி வைக்கவும். ஆறியதும் அந்தத் தண்ணீரில் பயத்த மாவைக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். ஒற்றைச் செம்பருத்திப் பூ 10 எடுத்து கைகளால் கசக்கினால் சாறு வரும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கசக்கி, வடிகட்டவும். அதில் 2 டீஸ்பூன் வெந்தயத் தூள், 2 டீஸ்பூன் பயத்த மாவு கலந்து தலைக்கு பேக் மாதிரி தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். இது பொடுகையும், அதனால் வரும் அரிப்பையும் நீக்கும்.
வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகு, பிஞ்சு கடுக்காய் நான்கையும் தலா 25 கிராம் எடுத்து 100 கிராம் பயறு மற்றும் 100 கிராம் பூலாங்கிழங்கு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தலை குளிக்க உபயோகித்து வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயம், நெல்லிமுள்ளி, வால்மிளகு மற்றும் பிஞ்சுக் கடுக்காயை தலா 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
கால் லிட்டர் நல்லெண்ணெயில் பொடித்ததைப் போட்டு தைலம் பதம் வரும் வரைக் காய்ச்சவும். வாரம் 2 முறை இந்தத் தைலத்தைத் தலைக்குத் தடவி, இதற்கு முந்தைய குறிப்பில் சொன்ன கலவையால் தலையை அலசினால் பொடுகு மறையும். கூந்தல் பளபளப்புடன் கருமையாக வளரும். வெந்தயமும் நெல்லிமுள்ளியும் ஸ்ட்ரெஸை நீக்கும்.
மருதாணி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை மூன்றையும் தலா 1 கைப்பிடி எடுத்துப் பொடியாக நறுக்கவும். 4 நெல்லிக்காயை விதை நீக்கி சீவிக் கொள்ளவும். கால் லிட்டர் நல்லெண்ணெயை சூடாக்கி, இவற்றைச் சேர்த்து பசுமை மாறும் முன்பே அணைக்கவும். இந்த எண்ணெயை வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். தினசரி உபயோகிக்க நினைக்கிறவர்கள் நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெயில் இதைத் தயாரித்து உபயோகிக்கலாம்.