தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்க கூடிய ஒன்று.. ஆனால் சுற்றுசூழல் மாற்றம், மாசு நிறைந்த சூழல் போன்ற காரணங்களால் தலைமுடி கொட்டுதல் பிரச்சனை உண்டாகிறது. முடி கொட்டுவதை நிறுத்த நீங்கள் ஒரு சில வழிமுறைகளை கையாள வேண்டியது அவசியமாகும்.
முதலில் நீங்கள் தலைக்கு எப்படி குளிக்க வேண்டும், எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குளிக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதன் பின்னர் தலைக்கு வாரத்தில் ஒரு முறையாவது மாஸ்க் போட வேண்டியது அவசியமாகும்..
மேலும் கெமிக்கல் பொருட்களை தவிர்த்து, கூந்தலுக்கு இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டியது என்பது அவசியமாகும். இந்த பகுதியில் கூந்தலை எப்படி பராமரிப்பது மற்றும் சீக்கிரமாக முடிவளர்ச்சியை தூண்ட இந்த பகுதியில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யை நன்றாக சூடேற்றி, அதனை ஆற வைத்து தலைக்கு தடவி, நன்றாக வட்ட வடிவத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து, தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி நல்ல நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டு தலைக்கு குளிப்பதினால் முடி உதிர்வு குறையும். மேலும் கூந்தல் சிக்கல் விழுகாது.
கண்டிஸ்னர்
கூந்தலுக்கு கெமிக்கல் கண்டிஸ்னர்களை விட இயற்கையான கண்டிஸ்னர்களை உபயோகிப்பது சிறந்தது. இயற்கை கண்டிஸ்னரான தயிரை உபயோகப்படுத்தினால் சிறப்பான பலனை பெறலாம். மேலும் செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அதன் சாறை தலைமுடிக்கு அப்ளை செய்து கழுவினாலும் கூந்தல் மிருதுவாக இருக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாறை தயிருடன் சேர்த்துக் கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால் தலைமுடி நன்றாக வளருவதுடன் பொடுகு பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
வேப்ப எண்ணெய்
வாரத்தில் ஒரு முறையாவது வேப்ப எண்ணெய்யை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து குளித்தால், தலைமுடி நீளமாக வளரும். மேலும் பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் இல்லாமலும் இருக்கும்.
நுனி முடி வெடிப்பு
முடியின் வேர்க்கால்களில் வெடிப்புகள் இருந்தால், முடியின் வளர்ச்சியானது குறைந்து போய்விடும் எனவே மாதம் ஒருமுறை முடியின் வேர்க்கால்களில் உள்ள வெடிப்பு விழுந்த முடிகளை டிரிம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
முட்டையின் வெள்ளை கரு
வாரத்தில் ஒருமுறையாவது முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்கு அப்ளை செய்து நன்றாக ஊற வைத்து குளிக்க வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் கூந்தலில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கை வேக வைத்த நீரை கீழே கொட்டி விடாமல் இதனை கொண்டு தலைமுடியை அலசலாம். இதன் மூலமாக தலைமுடி செழிப்பாக வளருவதோடு, கூந்தலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் கிடைக்கின்றன.
தினமும் தலைக்கு குளிப்பது
தினமும் தலைக்கு குளிப்பதால் தலையில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் போய்விடுகிறது. இதனால் தலை வறட்சியடைந்து விடுகிறது… இதனால் முடியின் வேர்க்கால்கள் வலிமை குறைந்து போய்விடுகிறது. எனவே தினமும் தலைக்கு குளிக்காமல் வாரத்தில் இரண்டு முறை தலைக்கு குளிப்பது என்பது சிறந்தது. தேவைப்பட்டால் வாரத்தில் மூன்று முறை தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.
வினிகர்
வினிகரை நீரில் கலந்து அந்த நீரை கொண்டு ஸ்கால்ப் பகுதி மற்றும் முடியினை அலசினால் தலைமுடி மென்மையாகவும், நல்ல பளபளப்புடனும் இருக்கும்.
சீப்பு பயன்படுத்துவது
தலைக்கு குளித்துவிட்டு வந்தவுடன் இருக்கும் ஈரமான கூந்தலுக்கு சீப்பு பயன்படுத்துவது கூடாது. இவ்வாறு செய்தால், ஈரத்தினால் வழுவிழந்து கிடக்கும் முடிகள் சீப்பு உடன் வந்து விடும். முடியில் உள்ள சிக்குகளை எடுப்பதற்கு பெரிய பற்களை கொண்ட சீப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவுகள் சாப்பிடுவது
காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். கூந்தல் வளருவதற்கு வெளி பராமரிப்பு மட்டும் போதாது.. அத்தீயாவசிய ஊட்டச்சத்துக்களும் மிக மிக அவசியமாகும்.
தூக்கம்
தினமும் போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமாகும். இரவு தாமதமாக தூங்குவது என்பது கூடாது. உடலுக்கு போதிய ஓய்வு கொடுத்தால் தான் உடல் சரியான முறையில் இயங்கும்..!
கற்றாழை
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
வேப்பம் பூ
வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.
தேங்காய் எண்ணெய்
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயில் மூன்று தேக்கரண்டி தேயிலையைப் போட்டு காய்ச்சி தைலப்பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி கருமையாகவும் செழித்தும் அடர்த்தியாகவும் வளரும்.
கரிசலாங்கன்னி
வெள்ளைப்பூ இருக்கும் கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து அடை தட்டி நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.
தாமரை
ஓரிதழ் தாமரைவேர், சீந்தில் கொடியின் இலை, தண்டு, வேர், ஆலம் விழுதின் நுனிப்பாகம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு 200 கிராம் நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து அதை ஒருவாரம் வெயில் வைத்து பின்பு பதமாய் காய்ச்சி தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி நீண்டு வளரும்.
பூசணி கொடி
பூசணி கொடியி்ன் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு கசக்கி சாறு பிழிந்து அந்த சாற்றை முடி உதிர்ந்த இடத்தில் தடவி வந்தால் முடி வளரும்.
செம்பருத்தி பூ
செம்பருத்தி பூ அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் இலையும் கூந்தலை பளபளப்பாக்கும் தன்மை கொண்டது. ஒற்றை செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.