அனைவருக்கும் ஹென்னா என்பது வெள்ளை முடியை மறைக்கப் பயன்படுத்தும் ஒரு பொருளாகத் தான் தெரியும். ஆனால் ஹென்னாவை தலை முடிக்கு பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? உங்களுக்கு ஹென்னாவை தலை முடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மருதாணி இலைகளில் உள்ள உடல்நல பயன்கள்!!!
ஹென்னா என்னும் மருதாணிப் பொடியானது பொதுவாக கைகளை அழகாக வெளிக்காட்டப் பயன்படும் முக்கியப் பொருளாகும். காலங்காலமாக நம் முன்னோர்கள் இதனை ஏதேனும் பண்டிகை என்றால் கைகளில் தடவி வருவார்கள். அதுமட்டுமின்றி, மருதாணியானது உடலின் வெப்பத்தை தணிக்கவும் செய்யும். சரி, இப்போது ஹென்னா என்னும் மருதாணிப் பொடியை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
ஹென்னாவை மாதத்திற்கு இரண்டு முறை தலை முடிக்கு பயன்படுத்தினால், முடி ஆரோக்கியமாக இருப்பதுடன், நல்ல பட்டுப் போன்ற அடர்த்தியான முடியைப் பெறலாம். மேலும் ஹென்னாவானது பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்யும் குணம் கொண்டது. ஆகவே ஹென்னாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து 2 மணிநேரம் ஊற வைத்து, தலையில் நன்கு தடவி ஊற வைத்து அலசினால், முடி நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
ஹென்னா முடியை நன்கு பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமல்லாமல் முடிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதிலும் தொடர்ந்து ஹென்னாவை தலைக்கு பயன்படுத்தி வந்தால், அவை முடிக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து, முடியை அடர்த்தியாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ளும். ஆகவே நல்ல பொலிவான கூந்தல் வேண்டுமானால் தவறாமல் ஹென்னாவை பயன்படுத்தி வாருங்கள்.
உங்கள் முடி நரைத்திருந்தால், அதனை இயற்கையான முறையில் மறைப்பதற்கு ஹென்னா பயன்படும். ஹென்னாவில் எவ்வித கெமிக்கல்களும் கலக்காமல் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கொதிக்கும் நீரில் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் ப்ளாக் டீ மற்றும் 2 கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, ஹென்னா பொடியில் சேர்த்து பேஸ்ட் செய்து, இரவு முழுவதும் அல்லது 2 மணிநேரம் ஊற வைத்து, தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும்.
தலையில் பொடுகு அதிகம் இருந்தால் ஹென்னாவைப் பயன்படுத்துங்கள். அதிலும் 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து அதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் கடுகு எண்ணெயை சூடேற்றி, அதில் சிறிது மருதாணி இலையை சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள வெந்தய பேஸ்ட்டை சேர்த்து, பின் அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு போய்விடும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…