ஆண்களுக்கு முகம், கைகள் மற்றும் கால்களில் முடி வளர்வது சாதாரணம். அப்படி வளராவிட்டால் தான் அவர்களுக்கு பிரச்சனை. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. வளர்ந்தால் தான் அசிங்கமே! ஆகவே பல பெண்கள் தங்கள் முகம், கை, கால்களில் வளரும் முடிகளைப் போக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமானதே தவிர, நிரந்தரம் அல்ல.
ஆகவே முகம், கை மற்றும் கால்களில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்க இயற்கை வழிகளைப் பின்பற்றுவதே சிறந்தது. இப்படி இயற்கை வழிகளைப் பின்பற்றும் போது அதன் பலன் உடனே கிடைக்காவிட்டாலும், நாளடைவில் தேவையற்ற முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம். சரி, இப்போது சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளின் வளர்ச்சியைப் போக்க என்ன செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை நம்பிக்கையுடன் முயற்சித்துப் பாருங்கள்.
மஞ்சள்
மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
கடலை மாவு
கடலை மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
சர்க்கரை
வாரத்திற்கு இரண்டு முறை சர்க்கரையை தேனில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், முடியின் வளர்ச்சி தடைப்படும்.
தேன்
தேனில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமத்தில் உள்ள கருமையும் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
முட்டை
சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சியை தடுப்பதில் முட்டையின் வெள்ளைக்கரு முதன்மையானது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவில், சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, உரித்து எடுத்தால், சருமத்தில் உள்ள முடியானது உரிக்கும் போது வந்துவிடும்.
எலுமிச்சை
வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான மற்றும் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.