30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld3541
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

விலை கொடுத்து வாங்கப்படும் விபரீதம்

‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தி எனக்குப் பரிந்துரைத்த க்ரீம் அது. மெடிக்கல் ஸ்டோர்ல வாங்கி முகத்தில் போட்டேன். ஒரே வாரத்துல மாயாஜாலம் மாதிரி சிவப்பழகு சாத்தியம்னு சொன்னாங்க! சொன்ன மாதிரியே நான்கைந்து நாட்கள்லயே என் கலர் குப்னு ஏறின மாதிரிதான் தெரிஞ்சுது.

ஆஹான்னு சந்தோஷப்பட்டேன். ஆனா, போகப் போக இப்படி ஆகிடுச்சு!’’ – வருத்தப்பட்டுச் சொன்ன அந்தத் தோழியின் முகமெல்லாம் சிறு சிறு தடிப்புகள், வீக்கமும் சிவப்புமாக ஆங்காங்கே புள்ளிகளோடு அலர்ஜி அடையாளங்கள்!

‘ஐ’ படம்தான் நினைவுக்கு வந்தது நமக்கு. அழகு க்ரீம்களே இப்படி முகத்தைச் சிதைக்க முடியுமா? ‘‘நிறைய பேர் ஆபத்தான மருந்துகளை சிவப்பழகு பெறும் ஆசையில் முகத்தில் தடவுகிறார்கள். அவை மட்டுமில்லை… சில சிவப்பழகு க்ரீம்களும் மோசமான பக்க விளைவுகளைத் தருகின்றன’’ என அதிர்ச்சி பதில் தருகிறார் சரும நோய் மருத்துவர் டாக்டர் அகஸ்டின்.

‘‘சிவப்பழகு பெறுவதற்காக யாரோ தோழிகள் பரிந்துரைக்கும் க்ரீம்களை ஏதாவது பியூட்டி பார்லர்களிலோ, மருந்துக் கடைகளிலோ வாங்கிப் பூசிவிட்டு, இதுபோன்ற பிரச்னைகளால் மருத்துவர்களை நாடி வரும் பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அழகு க்ரீம்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது. வேறு ஏதோ மருந்துகளை அழகு க்ரீம்களாகப் பயன்படுத்துவதும் பிரச்னையை தீவிரமாக்குகிறது.

இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் முக்கால்வாசி சன்ஸ்கிரீன் மற்றும் சிவப்பழகு க்ரீம்களில் ஹைட்ரோகுவினோன் (hydroquinone) எனும் ஒரு வகை ரசாயனம் உள்ளது. இந்த ரசாயனத்தின் முக்கிய வேலை, தோலின் கறுப்புத் தன்மைக்குக் காரணமாக இருக்கும் மெலனின் சுரப்பு அளவைக் கட்டுப்படுத்துவதுதான். சூரிய ஒளியில் செல்வதாக இருந்தால் மட்டுமே இந்த க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்.

அதுவும் அளவாக, அவரவர் தோலின் குணத்துக்கு ஏற்ப அப்ளை செய்ய வேண்டும். சூரிய ஒளியே உடலில் படாத ஒருவர் தொடர்ந்து இப்படிப்பட்ட க்ரீம்களைப் பயன்படுத்தும்போது ஒக்ரொனோசிஸ் எனும் ஒரு வகை மூட்டு வலியும் வருவதாகச் சொல்கிறார்கள்’’ என்ற அகஸ்டின், சிவப்பழகு க்ரீம் என்பதன் அடிப்படை கான்செப்ட்டை விளக்கினார்.

‘‘நமக்கெல்லாம் பிறக்கும்போது ஒரு நிறம் இருக்கும். முழுமையாக வளர்ச்சி யுற்ற பிறகு ஒரு நிறம் நம்மோடு தங்கிவிடும். இதுதான் ஒருவருடைய நிரந்தர நிறம். இந்த நிறத்தைத் தருவது மெலனின். ஆனால், இந்த நிரந்தர கலர் கூட சூரிய ஒளியின் தன்மையால் சற்றுக் கறுத்து விடலாம். மெலனினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நமது கறுமை நிறத்தைக் குறைக்கலாம்; அதேபோல சன்ஸ்கிரீன் தடவினால் சூரிய வெப்பத்தின் விளைவைக் குறைக்கலாம்.

இந்த வேலையைத்தான் க்ரீம்கள் செய்கின்றன. எந்த க்ரீமைப் போட்டாலும், மெலனின் சுரப்பை முழுமையாகக் கட்டுப்படுத்தினாலும், பளிச்சென்று வெள்ளைக்காரர்கள் மாதிரியெல்லாம் நாம் வெளுத்துவிட முடியாது. வெயிலால் கறுத்த நிறம் மறைந்து, நமது நிரந்தர கலர் எதுவோ அது வெளிப்படும்…

அவ்வளவுதான்! நமது நிறம் ஒரே நாளில் கறுத்து விடுவதில்லை. சூரிய ஒளியின் தாக்கத்தால் படிப்படியாகத்தான் மங்குகிறது. அதே மாதிரி, க்ரீம்களால் கிடைக்கும் நிரந்தர கலரும் மெல்ல மெல்லத்தான் வெளிப்படும். க்ரீம் நிறைய அள்ளிப் பூசினால் நாளைக்கே சிவப்பாகிவிடலாம் என நம்பியும் நம் மக்கள் இப்படிப்பட்ட க்ரீம்களை அதிகம் உபயோகிக்கிறார்கள்!’’ – அனுபவம் தந்த ஆதங்கத்தோடு பேசினார் அவர்.

இப்படிப்பட்ட க்ரீம்கள் ஏற்படுத்தும் சில மோசமான விளைவுளைப் பட்டியலிட்டார் சென்னை சுந்தரம் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் சரும நோய் மருத்துவரான சர்வேஸ்வரி.‘‘ஸ்டீராயிட் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியையே மருத்துவக் காரணங்களுக்காக சற்று நேரம் நிறுத்தி வைப்பவைதான் ஸ்டீராய்டு மருந்துகள். சரும நோய் சிகிச்சைக்குப் பயன்படும் சில க்ரீம்களிலும் ஸ்டீராயிட் கலந்துள்ளது.

எல்லா சரும நோய்களுக்கும் இதை மருத்துவர்களே பயன்படுத்துவதில்லை. உதாரணமாக, வீக்கத்தைக் குறைப்பதற்காக டாக்டர்கள் எழுதித் தரும் ஒரு மருந்து க்ரீமில் க்ளோபெடஸால் என்ற ஸ்டீராய்டு கலந்திருக்கும். வீக்கத்தைக் குறைக்கும் அதே நேரம், இந்த மருந்தின் பக்கவிளைவாக தோல் வெளுப்பாகி விடும். இரண்டு மூன்று நாட்களில் வீக்கம் குறைந்ததும் மருந்தை நிறுத்திவிட வேண்டும் என சொல்லித்தான் கொடுப்பார் டாக்டர்.

ஆனாலும், இன்று பல பெண்கள் மளிகைக் கடையில் பொருட்களை வாங்குவது  மாதிரி, வீக்கத்துக்கான இந்த மருந்தை மருந்துக் கடைகளிலும் பியூட்டி பார்லர்களிலும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவரின் கண்காணிப்பு இன்றி இப்படிப்பட்ட ஸ்டீராய்டு க்ரீம்களைப் பயன்படுத்தினால் தோல் சுருங்கலாம், வெளிறலாம்,

தடிப்பு, கொப்புளங்கள், கட்டிகள் வரலாம், அரிப்பு தோன்றலாம், தோல் மிகவும் மெல்லியதாக மாறி வெடிப்புகள் உண்டாகி ரத்த நாளங்களே தோலின் வெளிப்பகுதியில் தெரியும்படியான ஆபத்துக்கு இட்டுச் செல்லலாம்! பத்து, பன்னிரண்டு வயது சிறுமிகள்கூட இப்படிப்பட்ட உபாதைகளோடு வருவதைப் பார்க்கும்போதுதான் வேதனையாக இருக்கிறது. கண்ட கண்ட க்ரீம்களைத் தடவுவதைவிட, வெயில் நாட்களில் முகத்தை துப்பட்டாவால் மூடிக் கொள்வது எவ்வளவோ நல்ல தற்காப்பு முறை’’

முகத்தில் முடி வளரும்!

* டெல்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் சயின்ஸ் அண்டு என்விரான்மென்ட் என்ற தன்னார்வ நிறுவனம் கடந்த ஆண்டு, இந்தியாவில் விற்கப்படும் சிவப்பழகு க்ரீம்களை ஆய்வு செய்தது. ‘‘73 க்ரீம்களை ஆய்வு செய்ததில், சுமார் 40 சதவீத க்ரீம்களில் பாதரசம் இருப்பது தெரிந்தது’’ என அறிவித்தது அந்த நிறுவனம். இது தவிர நிக்கல், குரோமியம், காரீயம் போன்ற மெட்டல்களும் இருந்தன. பாதரசம் தோலையும் சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பதால், அதை க்ரீம்களில் பயன்படுத்த தடை இருக்கிறது. ஆனாலும் அது க்ரீம்களில் சேர்க்கப்பட்டது. குரோமியம் புற்றுநோய்க்கான ஒரு காரணி. ஆனாலும் அதுபற்றி யாருக்கும் கவலை இல்லை.

*ஸ்டீராய்டு கலந்த அழகு க்ரீம், முகத்தை சிவந்து வீங்கச் செய்கிறது; முகப்பரு ஏராளம் வரவும் இது காரணமாகிறது. தோலின் மேற்புறப் படலத்தை மெல்லியதாக்கி, உள்ளே இருக்கும் ரத்த நாளங்கள் வெளியில் தெரியச் செய்துவிடுகிறது. சில க்ரீம்களை அதிகமாகப் பயன்படுத்தியதால் முகத்தில் ஏராளமான முடி வளர்ந்து அவதிப்பட்ட பெண்களும் உண்டு என்கிறார் அவர்.

Related posts

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

nathan

திடீரென கிளாமரை மறந்த ரம்யா பாண்டியன்..!

nathan

‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’ ஒரு இயற்கை மருந்து!…

sangika

வழுக்கை வராமல் தடுக்க

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

தூதரகத்திலிருந்து வெளியேறிய இந்தியர்கள்..துணைக்குவந்த தலிபான்கள்!

nathan

காலையில் தூங்கி எழும் போது முகம் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

விடுமுறை நாட்களில் முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவரா நீங்கள்?

sangika