‘அருளிலார்க்கு அவ்வுலகமில்லை’ என ஒரு பழமொழி உண்டு. ஆனால் இன்றோ ‘அழகிலார்க்கு இவ்வுலகமில்லை’ என்று சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. பெரும்பாலான பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அடிப்படையான சில தவறுகளைச் செய்கிறார்கள். தினமும் தலைமுடியை அலசவோ அல்லது மிகவும் அதிகமாக கண்டிஷனர்களைப் போட்டு, கூந்தலை மிகவும் மிருதுவாகவோ அல்லது சிக்கலின்றி ஆக்கவோ செய்கின்றனர்.
சிலர் தங்கள் முடியை அலசுவதில்லை அல்லது பிரஷ்களை சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. சில சமயம் புருவ முடிகளை அதிகமாக எடுத்துவிடுவர். இவை சிறிய தவறுகளாயினும், உண்மையில் சருமத்திலும், முடிக்கும் பெரும் கேடுகளை விளைவிப்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நீங்கள் நினைவில் கொள்ள இதோ சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சுத்தமான மேக்கப் பிரஷ்கள்
நீங்கள் அவசிம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுள் இதுவும் ஒன்று. உங்கள் மேக்கப் பிரஷ்களை தூய்மைப்படுத்தவில்லை என்றால் அவற்றில் பாக்டீரியாக்கள் வளர அனுமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே உங்கள் மேக்கப் பிரஷ் மற்றும் சீப்புகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்.
தினமும் தலைக்கு ஷாம்பு போட வேண்டியதில்லை
தினமும் ஷாம்பு போட்டு தலையை சுத்தம் செய்வதால் மிகவும் தூய்மையாகவும் நல்ல நிலையிலும் வைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது. ஆனால் அது தவறு. அவ்வாறு அடிக்கடி செய்வது, தலையிலுள்ள எண்ணெய் பசையைப் போக்கி முடிக்கு நல்லதை விட கெடுதலை அதிகமாகச் செய்யும்.
அதிக அளவு கண்டிஷனர் முடிக்குக் கேடு
கண்டிஷனர்களை பெரும்பாலானோர் முடி முழுவதும் மற்றும் தலையிலும் ஷாம்புவைப் போல தடவுகின்றனர். ஆனால், முடியோ வேர்களில் தான் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பதால், அந்த இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கழுத்தை முகத்திற்கு ஈடாக கவனியுங்கள்
உங்களுடைய தினசரி சரும பராமரிப்பின் ஒரு அங்கமாக என்றாவது கழுத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், ஈரப்பதம் சேர்க்கவும் முயன்றதுண்டா? அப்படி இல்லையெனில், உங்கள் தாடையுடன் அந்த வேலையை முடித்துக் கொள்ளாமல், மெல்லிய மிருதுவான சருமமாகிய கழுத்துப் பகுதியையும் நன்கு கவனித்துப் பராமரியுங்கள். இந்த இடம் மிகவும் உணர்வுள்ள ஒரு முக்கியமான இடம் என்பதால், அதை நன்கு கவனிப்பது அவசியம்.
பொறுமை அவசியம்
மேக்கப் செய்து கொள்ளும் போது, பொறுமை மிகவும் அவசியம். மாய்ஸ்சுரைசர் போடும் போது அது உலர சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே உங்கள் மேக்கப்பைத் துவங்கும் முன் சற்று பொறுத்திருந்து மாய்ஸ்சுரைசர் உலர்ந்த பின் வேலையைத் தொடங்குங்கள். பொறுமை தருவதைப் போல பலன்கள் வேறு எதனாலும் தர முடியாது என்பதை உணர்ந்து சில விஷயங்களில் அவசரப்படாமல் செயல்படுங்கள். அவ்வாறு அவசரப்பட்டு மாய்ஸ்சுரைசர் காய்வதற்கு முன் போடப்பட்ட மேக்கப்பில் பொலிவில்லாமலும் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும் காணப்படுவீர்கள்.
முகச்சீரமைப்புப் பொருட்களிடம் எச்சரிக்கை தேவை
அடிக்கடி ஸ்பாட் க்ரீம்கள் தடவுவது மிகவும் சுலபம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். இவை சருமத்தில் நெடுநேரம் இருப்பதுடன், இவற்றை சரியாக இடவில்லையென்றால் சிக்கல் தான். ஆகவே இவற்றின் பாக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அதேப்போல் மிகவும் அடர்த்தியாக க்ரீம்களைப் பூசாதீர்கள். ஏனென்றால், உங்கள் சருமம் மூச்சு விடுவதற்கு அனுமதிப்பது அவசியம்.
முடியை ஸ்டைல் செய்யும் போது கவசத்தை உபயோகியுங்கள்
உங்கள் முடியின் மீது ட்ரையர் அல்லது ஹேர் ஸ்ட்ரெயிட்டனர் ஆகியவற்றை எவ்வித பாதுகாப்பின்றி உபயோகப்படுத்துவது மன்னிக்க முடியாத தவறு. உங்கள் முடியை சூடான காற்றினால் எந்த வித பாதுகாப்பும் இன்றி உலர வைப்பது, அதை சில வழிகளில் வறண்டு போகச் செய்து, கடுமையாகவும் மிகவும் மோசமாகவும் ஆக்கிவிடும்.
புருவ முடிகளை கண்ணாடிக்கு மிக அருகில் வைத்து எடுத்தல்
உங்கள் புருவத்தை சரிசெய்யும் போது புருவத்தின் மொத்த வடிவத்தைப் பார்க்காமல் மிக அருகில் ஒவ்வொரு முடியைப் பார்ப்பதால், உங்கள் புருவத்தை மிகவும் மெலிதாகவோ அல்லது சமனற்ற வடிவத்திலோ ஆக்கிவிட வாய்ப்பிருக்கிறது. மாறாக, ஒரு பெரிய கண்ணாடி முன் சில அடிகள் பின் சென்று உங்கள் புருவம் மட்டுமின்றி, முகம் முழுவதும் தெரியும் வண்ணம் செய்து கொள்வது நல்லது.