24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
p90
தையல்தையல் டிப்ஸ்கள்

கைகொடுக்கும் கிராஃப்ட்!

‘பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும்’ என்ற பயத்தினாலேயே, பலர் சுயதொழிலில் இறங்கத் தயங்குவார்கள். ஆனால், குறைந்த முதலீட்டிலேயே லாபம் கொழிக்கும் தொழில்கள் பல உண்டு. அத்தகையவற்றில் ஒன்றுதான், தலையணை தயாரிக்கும் தொழில்.
”என்ன… ‘குறைந்த செலவில், அதிக லாபமா? எப்படி… எப்படி?’ என்கிறீர்களா?” இதோ அந்த சூட்சமத்தை உங்களுக்கு சொல்லித் தருகிறார், சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த, ‘எத்னிக் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர், வீணா. ”என் சொந்த ஊர் சென்னைதான். கணவர் ராஜேஷ் சோழிங்கநல்லூர்ல ஒரு கிரானைட் கம்பெனியில மேனேஜரா இருக்கார். நான் யூ.ஜி சைக்காலஜி படிச்சுட்டு, கற்றல் குறைபாடுகள் (லேர்னிங் டிஃபிக்கல்ட்டி) உள்ள 15 குழந்தைகளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். ஓய்வு நேரங்கள்ல என் மகள் பிரசன்னாவுக்கு டிசைன் டிசைனா டிரெஸ் போட்டு, அழகு பார்ப்பேன். இதைப் பார்த்த தோழிகள், ‘ஆர்ட் அண்ட் கிராஃப்ட், பெயின்ட்டிங்… இப்படியெல்லாம் நீ ஏன் கத்துக்கக் கூடாது?’னு கேட்டாங்க. என் மனசுக்கும் அது சரினு படவே… கிளாஸ்ல சேந்துட்டேன்.
கோர்ஸ் முடிச்ச கையோட மத்தவங்களுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கி, ஆறு வருஷமா எம்ப்ராய்டரி, பெயின்ட்டிங், மியூரல் வொர்க்னு ஆர்ட் சம்பந்தப்பட்ட தொழில்களை கத்துக் கொடுத்துட்டிருக்கேன். அதுல ஒண்ணு… சாட்டின் கிளாத் பில்லோ” என்று சொல்லும் வீணா,
”ரொம்ப நேரம் ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்கறவங்க, அதிகமா டிராவல் பண்றவங்களுக்கு முதுகு வலி வரும். அந்த மாதிரி சமயங்கள்ல ஸீட்ல இந்த பில்லோவை வெச்சு ரெஸ்ட் கொடுத்துட்டா, முதுகு வலி வராது. இதை எப்படி செய்றதுனு பார்ப்போம்” என்றபடி, செய்முறை பாடம் நடத்த ஆரம்பித்தார்.

தேவையான பொருட்கள்:
பிங்க் நிற சாட்டின் கிளாத் – ஒன்றேகால் மீட்டர் (இரண்டு தலையணைகளுக்கு), மஞ்சள் நிற சாட்டீன் கிளாத் – சிறிய அளவில், கத்தரிக்கோல், டேப் அல்லது ஸ்கேல், சாக்பீஸ், ஸ்டஃபிங் காட்டன் (அடர்த்தியான பஞ்சு), ஒரு ரூபாய் அளவுள்ள பட்டன் அல்லது வாஷர் (ஹார்டுவேர் ஷாப்களில் கிடைக்கும்), பூ கோக்கும் ஊசி, எம்ப்ராய்டரி நூல்.
செய்முறை:
படம் 1: முதலில் சாட்டின் கிளாத்தை எடுத்துக் கொண்டு, அதை சரிசமமாக வெட்டி ஒரு பாகத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த ஒரு பாகத்தில்தான் ஒரு தலையணை செய்யப் போகிறோம் (மற்றொரு பாகத்தில் இன்னொரு தலையணை செய்யலாம்).
படம் 2: கிளாத்தை நன்றாக விரித்து, நீளவாக்கின் ஓரங்களில் இரண்டு அங்குலம், அகலவாக்கின் ஓரங்களில் ஆறு அங்குலம் என இடைவெளிவிட்டு மார்க் செய்து, படத்தில் காட்டியுள்ளது போல் கோடுகள் போட்டால் ஒரு செவ்வகம் கிடைக்கும்.
படம் 3: செவ்வகத்தின் நடுவில் நீளவாக்கில் இரண்டு அங்குல அகல கட்டம் வரையவும்.
படம் 4: இரண்டு அங்குல நீள் கட்டத்தை, எட்டு பாகங்களாகப் பிரித்து, கோடு போடவும்.
படம் 5: நீளவாக்கில் இருக்கும் இந்த கட்டம் முழுக்க… துணியின் உள் பாகத்தில் ஸ்டஃபிங் காட்டனை வைத்து, மேல் பக்கத்தில் ஒவ்வொரு கட்டத்தையும் தனித்தனியாக தைத்து முடிச்சுப் போடவும்.
படம் 6: இப்போது படத்தில் காட்டியுள்ளது போன்ற எட்டு பாகங்கள் தொடர்ச்சியாகக் கிடைக்கும். ஆறு அங்குல அகலத்துக்கு இடைவெளி விட்டு கோடு வரைந்திருக்கும் இரு பாகங்களையும் உள்புறமாக இணைத்துத் தைக்கவும்.

p90a

படம் 7: இப்போது, இரண்டு அங்குல இடைவெளி விட்டு கோடு வரைந்திருக்கும் பகுதிகள் கீழே ஒன்று மேலே ஒன்று என இரண்டு பகுதிகளாக கிடைக்கும். இதில் கீழ் பகுதியில் உள்புறமாக சிறுசிறு இடைவெளியில் நூலைக் கொண்டு தைத்து, (இலகு தையல்) இழுத்தால்… சுருங்கிய வடிவம் கிடைக்கும்.
படம் 8: இப்போது, சுருங்கிய பாகத்தின் வெளிப்புறத்தில் பட்டன் தைக்க வேண்டும். மஞ்சள் நிற சாட்டின் கிளாத்தை பாதி கர்சீஃப் அளவுக்கு எடுத்து, அதனுள் சிறிது காட்டனையும், வாஷரையும் வைத்து படத்தில் காட்டியுள்ளது போல் கழுத்துப் பகுதியை முடிச்சுப் போட்டு (குளோசிங் பட்டன்), சுருங்கிய வடிவ பாகத்தின் மீது வைத்து உள்புறமாக நூல் கொண்டு தைக்கவும்.
படம் 9: இப்போது தலையணை பை தயார். இதனுள் காட்டனை திணித்து, கீழ் பாகத்தில் செய்தது போலவே, இங்கேயும் இலகு தையல் போட்டு, மஞ்சள் நிற சாட்டின் கிளாத் மற்றும் வாசர் கொண்டு குளோசிங் பட்டன் தைத்தால்… ‘மெது மெது’ சாட்டின் பில்லோ ரெடி!
பாடத்தை முடித்த வீணா… ”தைச்சு முடிச்சதும்… பெரிய தலையணை மாதிரி இருக்கும். பயன்படுத்த ஆரம்பிச்சுட்டா, நார்மல் அளவுக்கு வந்துடும்.
இங்க சொல்லிக் கொடுத்திருக்கிற தலையணை டிசைன், பேஸிக் மாடல். இதுல இன்னும் சில வித்தியாசமான முடிச்சு போட்டா, வித்தியாசமான கிராண்ட் தலையணை கிடைக்கும். இதை செய்றதுக்கு 100 ரூபாய் வரை செலவாகும். ஒரு தலையணை 200 ரூபாய் வரை விற்கலாம். நல்ல வருவாயை அள்ளித் தரக்கூடிய இந்த பிஸினஸில் கொடிகட்டிப் பறக்க ‘வாய் வழி’ விளம்பரம்தான் முக்கியமா கை கொடுக்கும்” என்று அழகான டிப்ஸும் தந்தார்.
500 போட்டால் 1,000 கிடைக்கும் இந்த பிஸினஸை நீங்க மிஸ் பண்ணுவீங்க..?!

Related posts

அளவெடுத்து வெட்டும் முறை Blouse

nathan

வித விதமான கழுத்து டிசைன்கள்

nathan

ழந்­தை­க­ளுக்­கான படுக்கை விரிப்­பு (Cot Sheet)

nathan

குறுக்குத் தையல்

nathan

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan

சுடிதார் தைப்பது எப்படி?

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

சூப்பர் லெக்கிங்ஸ்

nathan

தையல் டிப்ஸ்கள்

nathan