பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை:
இசையாலும் அன்புள்ளத்தாலும் அனைவரையும் கட்டி வைத்திருந்த மாபெரும் இன்னிசைக்குயில் தன் மூச்சை நிறுத்தியுள்ளது. எமது விடுதலைப் போராட்டத்தின் மிக இறுக்கம் நிறைந்த காலத்தில் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதிலும் அதை மக்கள் மனதில் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் எழுச்சிப் பாடல்கள் பெரும் பங்காற்றியிருந்தன.
அச்சுறுத்தல்கள் நிறைந்த அன்றைய காலத்திலும் தமிழகத்தில் இருந்து தனது தேமதுரக் குரலால் விடுதலைப் பாடல்கள் பலவற்றைப்பாடி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்ததோடு தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையான இடத்தைப் பிடித்திருந்தார். அவர் இன்று எம்மோடு இல்லையென்றாலும் இசையுலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்துக் கொண்ட மாபெரும் கலைஞனின் பாடல்கள் எப்போதும் அவரின் குரலைச் சுமந்து கொண்டேயிருக்கும்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.