ஆண்கள், பெண்கள் என இருவரும் சந்திக்கும் பிரச்சனை தான் கூந்தல் உதிர்தல். இப்படி முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி, தற்போதைய அவசர காலத்தில் முடியை பராமரிக்க பலருக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்தாலும், சரியான உணவுகளை உட்கொள்ளாததால், முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
எனவே தான் கூந்தல் உதிர்தல் பிரச்சனையை பலர் சந்திக்கின்றனர். இதனால் 30 வயதடையும் முன்னரே, பல ஆண்கள் வழுக்கை தலையைப் பெறுகின்றனர். ஆனால் சரியான வாழ்க்கை முறையையும், ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்து வந்தால், முடி உதிர்தலைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை தூண்டலாம்.
இங்கு போதிய சத்துக்களின்றி வலிமையிழந்து முடி உதிர்வதைத் தடுக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.
பாதாம்
முடி உதிர்வதைத் தடுப்பதிலும், முடியின் வளர்ச்சியை தூண்டுவதிலும் பாதாமை விட மிகவும் சிறப்பான உணவுப்பொருள் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் பாதாமில் முடி வெடிப்பை தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து, புரோட்டீன் போன்றவையும் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுத்து வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஓட்ஸ்
ஓட்ஸில் கனிமச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கம் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதனை காலை வேளையில் எடுத்து வந்தால், உடல் எடை குறைவதுடன், ஆரோக்கியமான கூந்தலையும் பெறலாம்.
கோதுமை
கோதுமை உணவுகளும் முடி கொட்டுவதைத் தடுக்கும். அதற்கு கோதுமை சப்பாத்தியோ அல்லது கோதுமை பிரட்டோ அன்றாடம் சாப்பிட்டு வாருங்கள். இதனால் நிச்சயம் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸில் வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை முடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதேப்போல் வைட்டமின் ஈ முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் கொலாஜன் உற்பத்திக்கு வேண்டிய வைட்டமின் சி அதிகம் உள்ளது. கொலாஜன் உற்பத்தி அதிகம் இருந்தால், அவை முடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் வைட்டமின் சி உடலில் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவியாக இருக்கும்.
மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மீன் சாப்பிட்டால் முடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் மீனில் நிறைந்துள்ள அந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டினால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளான இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றைத் தடுத்து, அவற்றால் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
முட்டை மற்றும் பால்
முடியை வலிமையாக்க முட்டை மற்றும் பால் மிகவும் சிறப்பான உணவுப்பொருள். ஆகவே அன்றாடம் இதனை உட்கொண்டு வந்தால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
கேரட்
கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, முடிக்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் இயற்கையான எண்ணெய் சுரக்க உதவும். மேலும் இவை முடியின் நிறம் மற்றும் வலிமையையும் அதிகரிக்கும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையை பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுபவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முடி கொட்டவே கொட்டாது. ஏனெனில் உலர் திராட்சையில் இரும்பிச்சத்து அதிகம் இருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இதனால் உடலில் தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, ஸ்கால்ப்பில் மயிர்கால்கள் வலிமையோடு இருக்க வழி செய்யும்.
பீன்ஸ்
பலரது வீட்டில் பீன்ஸ் பொரியல் தான் மதிய வேளையில் இருக்கும். அப்படி தினமும் செய்வதால் பலர் அதனை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் உங்களுக்கு முடி கொட்டாமல் இருக்க வேண்டுமானால், பீன்ஸ் பொரியலை தவறாமல் சாப்பிடுங்கள். ஏனென்றால், பீன்ஸில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக உள்ளது. இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து முடி ஆரோக்கியமாக இருக்கும்.