எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை அதிகமாக்கிவிடும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியர்வையினால் ஆடைகளின் மேல் பல ஓவியங்கள் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனைப் பார்க்கும் போதே, நமக்கு வெட்கமாக இருக்கும்.
இத்தகைய வியர்வை பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என்று பலர் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில இயற்கை நிவாரணிகளைக் கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது அக்குளில் தடவி படுத்தால், அதிகமாக அக்குள் வியர்ப்பதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால், தினமும் காலையில் குளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் அக்குளில் தடவி, பின் குளித்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம். இருப்பினும் இரவில் பயன்படுத்தினால் தான் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அக்குள் வியர்க்காமல் வறட்சியுடன் இருப்பதை நன்கு காணலாம்.
கார்ன் ஸ்டார்ச்
அக்குளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிது கார்ன் ஸ்டார்ச் தடவினால், அது அக்குளில் உள்ள அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சி, வியர்வை துர்நாற்றம் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இப்படி செய்யும் போது அடர் நிறம் கொண்ட ஆடைகளை உடுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது நன்கு வெளிப்படும்.
எலுமிச்சை
எலமிச்சைக்கு அதிகமாக வியர்ப்பதை தடுக்கும் சக்தி உள்ளது. அதற்கு எலுமிச்சை துண்டை அக்குளில் தடவி தேய்த்து, கழுவ வேண்டும். இதனால் வியர்ப்பது குறைவதுடன், அக்குள் கருமையும் நீங்கும்.
காட்டன் ஆடைகள்
காட்டன் ஆடைகளை உடுத்தினால், அது அதிகப்படியன வியர்வையை உறிஞ்சி, அக்குளில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும்.
காரமான உணவுகளைத் தவிர்க்கவும்
அதிகமாக வியர்ப்பதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உண்பது தான. ஆகவே காரமான உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.